கொறடா உத்தரவை மீறியதாக இரு அணியினர் புகார் 53 சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்


கொறடா உத்தரவை மீறியதாக இரு அணியினர் புகார் 53 சிவசேனா எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ்
x

மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அங்கம் வகித்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது.

மும்பை,

மராட்டியத்தில் சிவசேனா தலைமையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் அங்கம் வகித்த மகாவிகாஸ் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்தநிலையில் கடந்த மாதம் 20-ந் தேதி சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமைக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கினார். மேலும் அவர் பா.ஜனதா ஆதரவுடன் கடந்த 30-ந் தேதி முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார். இதில் அவர் சட்டசபையில் கடந்த 4-ந் தேதி பெரும்பான்மையை நிருபித்தார்.

அப்போது உத்தவ் தாக்கரே அணி கொறடா சுனில் பிரபு சிவசேனா எம்.எல்.ஏ.க்களை ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு கூறினார். இதேபோல ஏக்நாத் ஷிண்டே அணி கொறடா பாரத் கோகவாலே சிவசேனா எம்.எல்.ஏ.க்களை அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தெரிவித்தார். இதில் மொத்தம் உள்ள 55 சிவசேனா எம்.எல்.ஏ.க்களில், 40 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ஏக்நாத் ஷிண்டே அரசுக்கு ஆதரவாகவும், 15 பேர் எதிராகவும் வாக்களித்தனர்.

இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே அணி தரப்பில் கட்சியின் கொறாடாவாக நியமிக்கப்பட்ட பாரத் கோகவாலே அவரது உத்தரவை மீறி செயல்பட்ட உத்தவ் தாக்கரே ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 14 பேரை (ஆதித்ய தாக்கரே தவிர) தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகர் ராகுல் நர்வேக்கரிடம் புகார் அளித்தார். இதேபோல உத்தவ் தாக்கரேவால் சிவசேனா கொறடாவாக நியமிக்கப்பட்ட சுனில் பிரபு ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவாக வாக்களித்த 39 எம்.எல்.ஏ.க்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார். இருதரப்பினரும் அளித்த புகார் குறித்து சட்டசபை முதன்மை செயலாளர் ராஜேந்திர பாகவத் சிவசேனா 2 அணிகளையும் சேர்ந்த 53 எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் 7 நாட்களுக்குள் நோட்டீசுக்கு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சட்டசபை முதன்மை செயலாளரிடம் நோட்டீசு வந்து இருப்பதை 2 அணி எம்.எல்.ஏ.க்களும் உறுதிப்படுத்தி உள்ளனர். இதற்கிடையே தகுதி நீக்க விவகாரத்தில் அதிருப்தி அணியினர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story