வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பிரதமர் வல்லவரல்ல - ராகுல்காந்தி விமர்சனம்
வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பிரதமர் வல்லரவல்ல என்று ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
புதுடெல்லி,
அனைத்து மத்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் உள்ள மனிதவளத்தின் நிலை குறித்து பிரதமர் மோடி இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்கு பின் மத்திய அரசு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் அடுத்த 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேரை பணியமர்த்த பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 1.5 ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசில் என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
இது தொடர்பாக ராகுல்காந்தி டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் பிரதமர் வல்லவரல்ல. வேலைவாய்ப்பு தொடர்பான செய்திகளை உருவாக்குவதில் மட்டுமே வல்லவர். 8 ஆண்டுகளுக்கு முன் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என வாக்குறுதி அளித்து இளைஞர்கள் ஏமாற்றப்பட்டது போன்று தற்போது 10 லட்சம் பேருக்கு அரசு வேலை என்று ஏமாற்றப்படுகின்றனர். இது பொய்யான வாக்குறுதி கொடுக்கும் அரசாங்கமல்ல மிகப்பெரிய பொய் வாக்குறுதி கொடுக்கும் அரங்சாங்கம்' என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.