கடந்த ஜூன் வரை அன்னிய முதலீட்டில் மராட்டியம் முதலிடம்; பட்னாவிசுக்கு காங்கிரஸ் பதிலடி


கடந்த ஜூன் வரை அன்னிய முதலீட்டில் மராட்டியம் முதலிடம்; பட்னாவிசுக்கு காங்கிரஸ் பதிலடி
x

அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்ததில் கடந்த ஜூன் மாதம் வரை மராட்டியம் முதலிடத்தில் இருந்ததாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பட்னாவிஸ் குற்றச்சாட்டு

வேதாந்தா- பாக்ஸ்கான் நிறுவனங்கள் சார்பில் சுமார் ரூ.1½ லட்சம் கோடி மதிப்பிலான செமிகன்டக்டர் ஆலை மராட்டியத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் திடீரென சமீபத்தில் குஜராத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசை எதிர்க்கட்சிகள் வறுத்தெடுத்தன.

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தேவேந்திர பட்னாவிஸ் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அன்னிய நேரடி முதலீட்டை ஈர்த்ததில் முந்தைய மகா விகாஸ் அகாடி அரசு குஜராத்தை விட பின்தங்கியதாக குற்றம்சாட்டினார்.

காங்கிரஸ் பதில்

இதற்கு காங்கிரஸ் கட்சி பதிலளித்துள்ளது. அந்த கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

எங்களது கூட்டணி ஆட்சியின் போது அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் மராட்டியம் பின்தங்கி விட்டதாக துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தவறான தகவலை தெரிவித்துள்ளார்.

மராட்டியம் முதலிடம்

தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்தும் துறை அறிக்கையின்படி, கடந்த 2019 அக்டோபர் முதல் கடந்த ஜூன் மாதம் வரை அன்னிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் மராட்டியம் முதலிடத்தில் இருந்தது. குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் தான் இருந்தது. நாங்கள் ஏற்கனவே உச்சத்தில் தான் இருந்தோம். இதற்கு தேவேந்திர பட்னாவிஸ் என்ன பதில் சொல்லப்போகிறார்?.

மேலும் 2021-22-ம் ஆண்டில் மராட்டியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.31 லட்சத்து 97 ஆயிரம் கோடி. அதேவேளையில் குஜராத் மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு ரூ.19 லட்சத்து 44 ஆயிரத்து 107 கோடியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story