இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய குற்றவாளி - 9 ஆண்டுகளுக்கு பின் கைது


இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து தற்கொலைக்கு தூண்டிய குற்றவாளி - 9 ஆண்டுகளுக்கு பின் கைது
x

கர்ப்பமடைந்த பாதிக்கப்பட்ட இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

மும்பை,

மராட்டிய மாநிலம் பல்ஹர் மாவட்டம் நலசொபுரா பகுதியை சேர்ந்த ராஜா நூர்முகமது ஷேக் என்ற நபர் கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தன்னுடன் பழகிய அந்த இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்துகொடுத்து அவரை ஷேக் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வீடியோவாக எடுத்து இது குறித்து யாரிடமாவது கூறினால் வீடியோவை சமூகவலைதளத்தில் பதிவிட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

ஷேக்கால் பல முறை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அந்த இளம்பெண் கர்ப்பமடைந்துள்ளார். இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி இளம்பெண் ஷேக்கிடம் கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஷேக் மறுத்துள்ளார்.

இதனால், மன உளைச்சலடைந்த கர்ப்பிணியான அந்த இளம்பெண் கடந்த 2013 ஏப்ரல் 22-ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதனை தொடர்ந்து, ராஜா நூர்முகமது ஷேக் மீது பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், போலீசார் வழக்குப்பதிவு செய்ததை அறிந்த குற்றவாளி ஷேக் தலைமறைவானார். இதனை தொடர்ந்து, தலைமறைவான ஷேக்கை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த ராஜா நூர்முகமது ஷேக்கை 9 ஆண்டுகளுக்கு பின் போலீசார் இன்று கைது செய்துள்ளனர். ரகசிய தகவலின் அடிப்படையில், பல்ஹர் மாவட்டத்தின் வசை வீரர் பகுதியில் பதுங்கி இருந்த நூர்முகமது ஷேக்கை போலீசார் இன்று கைது செய்தனர்.


Next Story