ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பெண்ணின் வீடு அருகே நடனமாடிய இளைஞர் அடித்துக்கொலை
மேடை அருகே நடனமாடியதால் இளைஞரை பெண்ணின் குடும்பத்தினர் கடுமையாக தாக்கினர்.
லக்னோ,
உலகம் முழுவதும் 2023 ஆங்கில புத்தாண்டு இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் நேற்று இரவு முதல் கலைகட்டியுள்ளன. பல்வேறு நகரங்களில் நேற்று இரவு முதல் பொதுஇடங்கள், குடியிருப்புகளில் குவிந்த மக்கள் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தின் கோரக்பூர் மாவட்டம் மச்லிகன் என்ற கிராமத்தில் ரஞ்சு என்ற பெண்ணின் வீட்டின் அருகே மேடை அமைக்கப்பட்டு ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றது.
அப்போது, அதேகிராமத்தை சேர்ந்த சோனு (வயது 25) என்ற இளைஞர் அந்த மேடை அருகே சென்று நடனமாடினார். அப்போது, ரஞ்சுவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே சோனு அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
வாக்குவாதம் முற்றிய நிலையில் சோனுவை ரஞ்சுவின் குடும்பத்தினர் கடுமையாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த சோனு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ரஞ்சு உள்பட குடும்ப உறுப்பினர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.