மாட்டு இறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகம்: ஒருவரை அடித்துக்கொன்ற கொடூர கும்பல்


மாட்டு இறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகம்: ஒருவரை அடித்துக்கொன்ற கொடூர கும்பல்
x

மாட்டு இறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகமடைந்த கும்பல் 32 வயதான நபரை அடித்துக்கொன்றது.

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை குர்லா பகுதியை சேர்ந்த அபான் அன்சாரி (32), நசீர் குரேஷி (24) ஆகியோர் கடந்த சனிக்கிழமை மாலை காரில் இறைச்சி கொண்டு சென்றுள்ளனர்.

நாசிக்கின் கவுதம்வாடி பகுதியில் கார் சென்று போது அந்த காரை 15 பேர் கொண்ட கும்பல் இடைமறித்தது. பசுபாதுகாவலர்கள் என்று தங்களை கூறிக்கொள்ளும் அந்த கும்பல் காரில் மாட்டு இறைச்சியை கடத்துவதாக கூறி அன்சாரி, குரேஷி மீது சரமாரி தாக்குதல் நடத்தியது.

தாங்கள் வைத்திருந்த இரும்பு கம்பி, கட்டையால் இருவரையும் அந்த கும்பல் கடுமையாக தாக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அன்சாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குரேஷி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதல் நடத்திய 11 பேரை கைது செய்தனர்.

காரில் கொண்டு சென்றது மாட்டு இறைச்சியா? அல்லது ஆட்டு இறைச்சியா? என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இறைச்சியை பரிசோதனைக்கு ஆய்வகத்திற்கு அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர்.

மாட்டு இறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தில் ஒரு நபரை கும்பல் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


Next Story