பீகார்: முதல்-மந்திரி அலுவலகத்தை தகர்க்கப் போவதாக மின்னஞ்சல் அனுப்பிய நபர் கைது
பீகார் முதல்-மந்திரி அலுவலகத்தை தகர்க்கப் போவதாக மின்னஞ்சல் அனுப்பிய 51 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.
பாட்னா,
பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரின் அலுவலகத்தை தகர்க்கப் போவதாக மின்னஞ்சல் அனுப்பிய 51 வயது நபரை போலீசார் நேற்று கைது செய்தனர். முன்னதாக கடந்த ஜூலை 16-ந்தேதி பாட்னாவில் உள்ள பீகார் முதல்-மந்திரி அலுவலகத்தை தகர்க்கப் போவதாக கூறி மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பினார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் பெகுசராய் மாவட்டம் பிபி கங்குலி தெருவில் உள்ள ஒரு சிறிய கடையின் உரிமையாளரான முகமது ஜாஹித் என்பவர் அந்த மின்னஞ்சலை அனுப்பியது தெரியவந்தது. இதையடுத்து பவ்பஜார் பகுதியில் நேற்று போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் மின்னஞ்சல் அனுப்ப அவர் பயன்படுத்திய செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
மின்னஞ்சலில் அவர் அல்-கொய்தாவுடன் தொடர்புடையவர் என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும் முதற்கட்ட விசாரணையில் அவருக்கு எந்த பயங்கரவாத இயக்கத்துடனும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் அவர் ஏன் அந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பினார் என்பது இன்னும் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.