கலர் டிவி, ரூ.10 ஆயிரம் வரதட்சணை கேட்டு கொடுமை: மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற நபருக்கு ஆயுள்
வரதட்சணை கேட்டு கொடுமை செய்து மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் கேந்திரபுரா மாவட்டத்தை சேர்ந்த பிரஜா கிஷோர் தாஸ் என்பவருக்கும் ரஞ்சிதா என்பவருக்கும் கடந்த 2012 பிப்ரவரி மாதம் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பின் ஒரு கலர் டிவி மற்றும் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாய் கூடுதல் வரதட்சணையாக தரும்படி ரஞ்சிதா குடும்பத்தினரிடம் பிரஜா கேட்டுள்ளார். ஆனால், கூடுதல் வரதட்சணையை ரஞ்சிதாவின் குடும்பத்தினர் தரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பிரஜா மற்றும் அவரது குடும்பத்தினர் ரஞ்சிதாவை உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தியுள்ளனர்.
பின்னர், ஒருகட்டத்தில் வரதட்சணை தொடர்பாக கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் பிரஜா தனது மனைவி ரஞ்சிதாவை கடுமையாக தாக்கி மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். கடுமையான தீக்காயமடைந்த ரஞ்சிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வரதட்சணை கொடுமை செய்து ரஞ்சிதாவை தீவைத்து அவரது கணவர் பிரஜா தீவைத்து கொன்றது குறித்து ரஞ்சிதாவின் சகோதரன் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மனைவியை வரதட்சணை கொடுமை செய்து மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற பிரஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக கேந்திரபுரா மாவட்ட கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது. அதில், மனைவியை பிரஜா வரதட்சணை கேட்டு கொடுமை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்றது உறுதியானது. இதையடுத்து, குற்றவளிக்கு ஆயுள் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. அபராத தொகையை செலுத்த தவறும்பட்சத்தில் கூடுதலாக 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவேண்டுமென கோர்ட்டு உத்தரவிட்டது. தீர்ப்பை தொடர்ந்து குற்றவாளி பிரஜா சிறையில் அடைக்கப்பட்டான்.