மாற்று மத நபரை காதலித்ததால் ஆத்திரம்: தங்கையை கழுத்தை நெரித்து கொன்ற இளைஞர்
மாற்று மத நபரை காதலித்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் தங்கையை கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த இளைஞர் ஹசன் (வயது 26). இவரது தங்கை அதேபகுதியை சேர்ந்த மாற்று மத நபரை காதலித்துள்ளார். இருவரின் காதலுக்கு ஹசன் மற்றும் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் எதிர்ப்பையும் மீறி இருவரும் காதலித்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஹசனின் தங்கையும் அவரின் காதலனும் வீட்டை விட்டு ஓடியுள்ளனர். ஆனால், ஹசனின் குடும்பத்தினர் காதலுடன் ஓடிச்சென்ற இளம்ப்பெண்ணை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அதேவேளை, இளம்பெண்ணின் காதலனை போலீசார் கடத்தல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், தனது தங்கைக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்துவைக்க ஹசன் மற்றும் அவரது குடும்பத்தினர் முயற்சித்துள்ளனர். ஆனால், திருமணத்திற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
திருமணம் தொடர்பாக ஹசனுக்கும் அவரது சகோதரிக்கும் இடையே நேற்று மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தங்கையை ஹசன் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.