விமான நிலையத்தில் சோதனையின்போது 'வெடிகுண்டு' என கூறிய பயணி கைது


விமான நிலையத்தில் சோதனையின்போது வெடிகுண்டு என கூறிய பயணி கைது
x
தினத்தந்தி 3 July 2022 3:41 AM IST (Updated: 3 July 2022 3:41 AM IST)
t-max-icont-min-icon

விமான நிலையத்தில் பரிசோதனையின்போது 'வெடிகுண்டு' என்ற வார்த்தையை கூறிய பயணி கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று அதிகாலை 1.30 மணி அளவில் வெளிநாடு செல்வதற்கான விமானம் தயார் நிலையில் இருந்தது. பயணிகளின் உடைமைகளை ஊழியர்கள் சரிபார்த்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, 63 வயது நிரம்பிய நபரும் அவரது மனைவியும் அந்த விமானத்தில் பயணி தயாராகிக்கொண்டிருந்தனர். அந்த பயணிகளின் உடைமைகளை விமான ஊழியர்கள் பரிசோதித்தனர்.

அந்த தம்பதியின் பை ஒன்றை விமான நிலைய ஊழியர்கள் சோதனை செய்துகொண்டிருந்தபோது இந்த பையில் என்ன உள்ளது என ஊழியர் கேட்டார். அதற்கு அந்த நபர் 'வெடிகுண்டு' என கூறினார்.

இதனால், அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக, அந்த நபரின் பையை பாதுகாப்பு படையினர் பரிசோதனை செய்ததில் அந்த பையில் எந்த வித வெடிகுண்டும் இல்லை என்பது தெரியவந்தது.

இதையடுத்து, வெடிகுண்டு உள்ளது என போலியாக மிரட்டல் விடுக்கும் வகையில் கூறிய நபரையும், அவரது மனைவியையும் பாதுகாப்பு படையினர் போலீசில் ஒப்படைத்தனர்.

இதனை தொடந்து அந்த நபரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் கைது செய்யப்பட்ட அந்த நபர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.


Next Story