சிரியா, லிபியா போல் உள்ளது.... யாராவது கேட்கிறீர்களா? - மணிப்பூர் வன்முறை குறித்து ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி வேதனை


சிரியா, லிபியா போல் உள்ளது.... யாராவது கேட்கிறீர்களா? - மணிப்பூர் வன்முறை குறித்து ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி வேதனை
x

மணிப்பூரில் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் வன்முறை நடந்து வருகிறது.

இம்பால்,

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் ஒரு மாதத்திற்கு மேலாக கலவரம் நீடித்து வருகிறது. அந்த மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையுடன் பெரும்பான்மை சமூகமாக உள்ள மெய்தி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்து வருகின்றனர். அதை அங்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை சமூகங்கள் எதிர்க்கின்றன.

இதனால் அங்கு இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மோதல் பல மாவட்டங்களுக்கு பரவி வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் பலர் உயிரிழந்தனர்.

வன்முறையை தடுக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மோதல் போக்கு தொடர்ந்து அதிரித்து வருகிறது.

இந்நிலையில், மணிப்பூரில் நடந்துவரும் வன்முறை தொடர்பாக அம்மாநிலத்தில் வசித்து வரும் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி நிஷிகாந்த் சிங் கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்ட டுவிட்டில், நான் ஓய்வு வாழ்க்கையை வாழ்ந்து வரும் மணிப்பூரை சேர்ந்த சாதாரண இந்தியன். மாநிலம் தற்போது மாநிலமாக இல்லை. லிபியா, சிரியா, நைஜீரியா போன்று உயிர் மற்றும் சொத்துக்களை யாரும் எந்த நேரத்திலும் அழிக்கும் வகையில் நிலைமை உள்ளது. மணிப்பூர் அதன் விளைவுகளை அதுவே சந்திக்க தனித்துவிடப்பட்டுவிட்டது போல் தோன்றுகிறது. யாராவது கேட்கிறீர்களா?' என்று பதிவு செய்துள்ளார்.

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியின் இந்த டுவிட் தற்போது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story