மணிப்பூர்: ராணுவ பாதுகாப்பு கோரி பழங்குடியின அமைப்பு மனு; அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
மணிப்பூரில் ராணுவ பாதுகாப்பு கோரி குகி பழங்குடியின அமைப்பு தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினரை பழங்குடியின பிரிவில் சேர்ப்பதற்கு ஆதரவாக கடந்த ஏப்ரலில், ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது. எனினும் இதற்கு குகி பழங்குடி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, தங்களை பழங்குடியின பிரிவில் சேர்க்க கோரி மே மாத தொடக்கத்தில் அவர்கள் பேரணியாக சென்றனர். இதற்கு எதிராக குகி பழங்குடியினரும் பேரணி நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது.
இதில், 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன.
இந்த நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை பரவியது. கடந்த மே மாத இறுதியில், ஒரு காவல் உயரதிகாரி உள்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவரின் வீடு சூறையாடப்பட்டது. ரைபிள் படை பிரிவின் ஆயுத கிடங்கில் இருந்து ஆயிரம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டும் இருந்தன.
இந்த ஆயுதங்களை வைத்திருக்கும் அனைவரும் அவற்றை திருப்பி ஒப்படைக்கும்படி பாதுகாப்பு படையினர் மீண்டும் வேண்டுகோளாக கேட்டு கொண்டனர். மத்திய மந்திரி அமித்ஷாவின் உத்தரவின்படி, மணிப்பூரில் அமைதி மற்றும் ஸ்திர தன்மை திரும்புவதற்காக இவற்றை விரைவில் ஒப்படைக்க கேட்டு கொள்ளப்பட்டது.
இந்த் நிலையில், கடந்த 13-ந்தேதி காமன்லோக் பகுதியில் நடந்த வன்முறையில் கிராம மக்கள் 11 பேர் கொல்லப்பட்டனர் என தகவல் தெரிவிக்கின்றது. தொடர்ந்து மணிப்பூரில் கலவரம் பரவிய நிலையில், மக்கள் அமைதி காக்கும்படி முதல்-மந்திரி பைரன் சிங் வேண்டுகோளாக கேட்டு கொண்டார்.
இந்த நிலையில், மணிப்பூர் பழங்குடியின அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அதில், குகி பழங்குடியினரை இந்திய ராணுவம் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தது.
ஆனால், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்து உள்ளது. இது முற்றிலும் சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் என்று தெரிவித்ததுடன், இந்த வழக்கு வருகிற ஜூலை 3-ந்தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என தெரிவித்தது.
எனினும், இதுபற்றி மத்திய அரசு கோர்ட்டில் கூறும்போது, மணிப்பூரில் பாதுகாப்பு முகமைகள் களமிறக்கப்பட்டு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணியை சிறந்த முறையில் செய்து வருகின்றன என்று தெரிவித்து உள்ளது.