மணிப்பூர் வன்முறை: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் - மாநில அரசு அறிவிப்பு
மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது.
இம்பால்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினர் வசித்து வருகின்றனர். அவர்கள் தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், பழங்குடி சமூகம் அல்லாதோரான இவர்களுக்கும், பழங்குடி பிரிவினருக்கும் இடையே கடந்த 3-ந்தேதி மோதல் உருவானது. இரு தரப்பினர் நடத்திய ஊர்வலம், வன்முறையாக மாறி கலவரம் வெடித்தது.
கலவரம் பல்வேறு மாவட்டங்களுக்கும் பரவி, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வாகனங்கள், வீடுகள், பள்ளி கூடங்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்டவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடித்து நொறுக்கியும், தீ வைத்து கொளுத்தியும் உள்ளனர். நிலைமை அத்துமீறி சென்ற நிலையில், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில், 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும் அரசு அமல்படுத்தியது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டது.
இந்த சூழலில், மணிப்பூரில் நேற்றும், இன்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த இரு நாட்களிலும் மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன் சிங், "வன்முறைக்கு அப்பாவி பொதுமக்கள் 60 பேர் பலியாகி உள்ளனர். 231 பேர் காயமடைந்து உள்ளனர். 1,700 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளன. மாநிலத்தில் அமைதியை கொண்டு வரும்படி மக்களிடம் வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன். பாதுகாப்பான இடங்களிலும், நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை, அவர்களுடைய சொந்த இடங்களுக்கு கொண்டு செல்லும் பணிகள் தொடங்கி உள்ளன" என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வன்முறையில் உயிரிழந்த 60 பேரின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று முதல்-மந்திரி பிரேன் சிங் அறிவித்துள்ளார். மேலும் வன்முறையில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.