மதுபானக் கொள்கை வழக்கு: சிபிஐ முன் மணீஷ் சிசோடியா ஆஜர்


மதுபானக் கொள்கை வழக்கு: சிபிஐ முன் மணீஷ் சிசோடியா ஆஜர்
x

Image Courtesy: ANI

மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார்.

புதுடெல்லி,

டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சில வாரங்களுக்கு முன் டெல்லி மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக, துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இது குறித்து விளக்கம் அளித்த துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா, பழிவாங்கும் நோக்கில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்றும், சிபிஐ சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியாவுக்கு, சிபிஐ அதிகாரிகள் நேற்று சம்மன் அனுப்பினர். டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story