டெல்லி பல்கலைக்கழக சட்ட படிப்பில் மனு ஸ்மிருதி? ஆசிரியர் அமைப்பினர் எதிர்ப்பு
டெல்லி பல்கலைக்கழக சட்ட படிப்பில் மனு ஸ்மிரிதியை கற்பிக்க ஆசிரியர் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லி பல்கலைக்கழகத்தின் இளங்கலை சட்ட படிப்பு மாணவர்களுக்கு 'மனு ஸ்மிருதி' (மனுவின் சட்டங்கள்) பாடத்தை கற்பிப்பதற்கான திட்டம் குறித்து பல்கலைக்கழகத்தின் கவுன்சில் கூட்டத்தில் இன்று விவாதிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ஆசிரியர்கள் அமைப்பின் ஒரு பிரிவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
முன்னதாக இளங்கலை சட்ட படிப்பு பயிலும் முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களின் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்வதற்கு டெல்லி பல்கலைக்கழகத்தின் உயர்மட்ட நிர்வாகத்தினரிடம் சட்ட கல்வி குழுவினர் ஒப்புதல் பெற்றுள்ளனர். இதன்படி முதல் செமஸ்டர் மற்றும் ஆறாவது செமஸ்டரில் மனு ஸ்மிரிதியை கற்பிக்கும் திட்டத்திற்கு கடந்த ஜூன் 24-ந்தேதி நடைபெற்ற சட்ட கல்வி பாடக்குழு கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இந்த திட்டத்திற்கு இடது சாரி ஆதரவு ஆசிரியர் அமைப்பான சமூக ஜனநாயக ஆசிரியர் முன்னணி (SDTF) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைப்பின் சார்பில் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், மனு ஸ்மிரிதி பெண்களின் உரிமைகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் குறித்த பிற்போக்கான கருத்துகளை பரப்புவதாகவும், இது முற்போக்கான கல்வி முறைக்கு முற்றிலும் எதிரானது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மனுஸ்மிருதி நமது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்புக்கும், இந்திய அரசியலமைப்பின் கோட்பாடுகளுக்கும் எதிரானது என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.