உ.பி. காவல்துறை அப்பாவிகளை கைது செய்கிறது - உத்தரகாண்ட் கூடுதல் தலைமைச் செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு


உ.பி. காவல்துறை அப்பாவிகளை கைது செய்கிறது - உத்தரகாண்ட் கூடுதல் தலைமைச் செயலாளர் பரபரப்பு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 18 Oct 2022 12:40 PM IST (Updated: 18 Oct 2022 12:42 PM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேச காவல்துறை பல முறை அப்பாவிகளை கைது செய்து குற்றம் சாட்டுகிறது என்று உத்தரகாண்ட் கூடுதல் தலைமைச் செயலாளர் கூறினார்.

டேராடூன்,

உத்தரபிரதேசத்தின் அண்டை மாநிலமான உத்தரகாண்ட் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா ரதுரி, உத்தரபிரதேச மாநில காவல்துறைக்கு எதிராக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன், உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தம் சிங் நகர் பகுதியில் ஜாபர் என்ற மணல் மாபியா பதுங்கி இருப்பதாக வெளியான தகவலை தொடந்து, அவரை கைது செய்ய உத்தரபிரதேச போலீசார் அங்குள்ள கிராமத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதையடுத்து, கிராம மக்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் உள்ளூர் பாஜக பிரமுகரின் மனைவி உயிரிழந்தார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். பல போலீசாரை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இறுதியாக, உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜாபர் கைது செய்யப்பட்டார். தவறான தகவலின் அடிப்படையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உ.பி போலீசார் நடத்திய தேடுதல் வேட்டை தோல்வியில் முடிந்தது.

இது குறித்து உத்தரகாண்ட் மாநில உத்தம் சிங் நகர் மூத்த காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், உத்தரபிரதேச காவல்துறையின் இந்த நடவடிக்கை குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை குறிவைத்து இதுபோன்ற கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் உத்தரகாண்ட் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர். இதன் காரணமாக உத்தரபிரதேச காவல்துறைக்கும் உத்தரகாண்ட் அதிகாரிகளுக்கும் இடையே வார்த்தைப் போர் தொடங்கியுள்ளது.

உத்தரகாண்ட் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா ரதுரி திங்கள்கிழமை செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், "உத்தரபிரதேச காவல்துறை பல முறை அப்பாவிகளை கைது செய்து அவர்களை குற்றம் சாட்டுகிறது. ஒரு நிரபராதியை கைது செய்யும் நடவடிக்கை, மேலும் 99 குற்றவாளிகள் உருவாக வழிவகுக்கும்" என்று கூறினார்.

இதற்கு பதிலடியாக, உத்தரகாண்ட் அதிகாரி பொறுப்பற்ற முறையில் பேசியிருப்பதாக உத்தரபிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற கருத்துகளை அதிகாரத்துவத்தினர் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

லக்னோ கூடுதல் டிஜி (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் கூறும்போது, ​​"உத்தரகாண்ட் கூடுதல் தலைமைச் செயலாளரின் கருத்தை நாங்கள் கேட்டுள்ளோம். எதுவுமே தெரியாமல் இதுபோன்ற கருத்துக்களை கூறுவது பொறுப்பற்ற செயல். இதுபோன்ற கருத்துகளை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்" என்றார்.

அதன் பின்னர், இது குறித்து விளக்கமளித்த உத்தரகாண்ட் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் ராதா ரதுரி கூறுகையில், "குற்றங்கள் முறையாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும், நிரபராதிகள் அல்ல.

அனைத்து மாநிலங்களிலும் போலீசார் சிறப்பாக செயல்படுகின்றனர். உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் உள்ள போலீசார் ஒரே நேரத்தில் பல குற்றங்களை விசாரிக்கின்றனர்" என்று கூறினார்.


Next Story