கர்நாடகத்தில் 8 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை; முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவு
கர்நாடகத்தில் தட்சிண கன்னடா உள்பட 8 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-மந்திரி சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
குடிநீர் தட்டுப்பாடு
கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு மழை இன்னும் பெய்ய தொடங்கவில்லை. இதன் காரணமாக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள அணைகளில் நீா்மட்டம் குறைந்து வருகின்றன. போதிய மழை பெய்யாததால், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பீதர், கலபுரகி, யாதகிரி, ராய்ச்சூர், கொப்பல், பல்லாரி, தட்சிண கன்னடா, உடுப்பி ஆகிய மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. இதனால் மக்கள் கிணற்று நீரை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். குடிநீர் தட்டுப்பாட்டால் அசுத்தமான குடிநீரை பயன்படுத்தும் நிலையும் உள்ளது.
சித்தராமையா ஆலோசனை
இதையடுத்து முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் இருந்தபடி அந்த 8 மாவட்டங்களின் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிகளுடன் காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் சித்தராமையா பேசியதாவது:-
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த 10-ந் தேதி தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் நிலவரப்படி மாநிலத்தில் 67 சதவீத மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் இயல்பான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. ஆனால் மழை குறைவால் பீதர், தட்சிண கன்னடா உள்பட 8 மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
அறிக்கை தாக்கல்
மாநிலத்தில் 15 மாவட்டங்களில் 322 கிராமங்களில் டேங்கர் லாரிகள் மூலம் நீர் வினியோகம் செய்யப்படுகிறது. 148 கிராமங்களில் தனியார் ஆழ்குழாய் கிணற்றை வாடகைக்கு எடுத்து நீர் வினியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பருவமழைக்கு முன்பு பெய்ய வேண்டிய கோடை மழை போதிய அளவுக்கு பெய்யாததால், தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதால் வரும் நாட்களில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராய்ச்சூர், கொப்பல் மாவட்டங்களில் குடிநீர் பிரச்சினை இல்லாவிட்டாலும், அங்கு குடிநீரில் கழிவுநீர் கலந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது. கிராம வளர்ச்சி-பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகள் அந்த பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பணிகளை தாமதப்படுத்தக்கூடாது
அந்த அறிக்கை அடிப்படையில் தவறு செய்த அதிகாரிகள் மீது தலைமை செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரிகள் தாலுகாக்களில் சுற்றுப்பயணம் செய்து வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க அதிகாரிகள் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட பகுதிகளில் 24 மணி நேரத்திற்குள் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்ட பொறுப்பு செயலாளர்களும் இந்த விஷயத்தில் கவனமாக செயல்பட வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடியாக அந்த பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். அரசின் உத்தரவுகளை காரணமாக கூறி பணிகளை தாமதப்படுத்தக்கூடாது. குடிநீருடன் கழிவுநீா் கலந்து மக்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் மீண்டும் நடைபெறக்கூடாது.
கடமை தவறக்கூடாது
அனைத்து தரப்பு மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம். நிதி தேவைப்பட்டால் ஒதுக்க அரசு தயாராக உள்ளது. ஆனால் ஏதாவது காரணம் கூறி கடமையில் இருந்து தவறக்கூடாது. குடிநீர் தட்டுப்பாடு என்பது மிக முக்கியமான பிரச்சினை. மழை வந்து குடிநீர் பிரச்சினை தீர்ந்தால் நல்லது. இல்லாவிட்டால் அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியாற்றி குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.
மாவட்ட பொறுப்பு மந்திரிகளுடன் நீங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும். கால்நடைகளுக்கும் குடிநீர் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அந்த விஷயத்திலும் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் தவறு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
விசாரணைக்கு சித்தராமையா உத்தரவு
ராய்ச்சூர் மாவட்டத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலந்ததில் ஒரு சிறுவன் உயிரிழந்தான். 30-க்கும் மேற்பட்டோர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டனர். அதே போல் கொப்பல் மாவட்டத்தில் சில கிராமங்களில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த கலந்து மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது அந்த மாவட்டத்தின் கனககிரி தாலுகாவில் கழிவுநீர் கலந்த குடிநீரை பயன்படுத்தியதால் 65 வயது பெண் உயிரிழந்தார். மேலும் 15 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதுகுறித்து கொப்பல் மாவட்ட தலைமை செயல் அதிகாரியுடன் பேசிய முதல்-மந்திரி சித்தராமையா, "குடிநீருடன் கழிவுநீர் கலந்ததால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க வேண்டும், அந்த பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இனி வரும் நாட்களில் இத்தகைய சம்பவங்கள் நிகழக்கூடாது. ஒருவேளை அவ்வாறு குடிநீருடன் கழிவுநீர் கலந்து மக்கள் பாதிக்கப்பட்டால், அதிகாரிகள் மீது பணி இடைநீக்கம் உள்பட கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் குறித்து மாவட்ட அளவிலான அதிகாரிகள் விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும்" என்றார்.