பத்ரா அணையில் மூழ்கி மருத்துவ மாணவர் சாவு
பத்ராவதி அருகே பத்ரா அணையில் மூழ்கி மருத்துவ மாணவர் உயிரிழந்தார். நண்பர்களுடன் அவர் குளிக்க சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
சிவமொக்கா,
மருத்துவ மாணவர்
குடகு மாவட்டத்தை சேர்ந்தவர் ஜகத். இவர் சிவமொக்காவில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவராத்திரியையொட்டி ஜகத் தனது நண்பர்கள் 5 பேருடன் பத்ராவதியில் உள்ள பத்ரா அணைக்கு சென்றார். பின்னர் அவர் நண்பர்களுடன் பத்ரா அணையின் நீர்தேக்க பகுதியில் குளித்தார். ஜகத்துக்கு நீச்சல் தெரியாது என தெரிகிறது. இதனால் அவர் அணையின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் ஜகத்தை காப்பாற்ற முயன்றனர்.
நீரில் மூழ்கி சாவு
ஆனாலும், அதற்குள் ஜகத் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது நண்பர்கள் பத்ரா அணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார், தீயணைப்பு படையினருடன் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தீயணைப்பு படையினர் அணையில் மூழ்கி பலியான ஜகத்தின் உடலை நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு மீட்டனர். பின்னர் போலீசார், ஜகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பத்ரா அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.