பால் விலை உயர்வுக்கு கண்டனம்
பால் விலை உயர்வுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவிப்பதாக சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவர் யு.டி.காதர் கூறினார்.
மங்களூரு:-
பால் விலை உயர்வு
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் நேற்று முன்னாள் மந்திரியும், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவருமான யு.டி.காதர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
பாஜக தலைமையிலான மாநில அரசு பொதுமக்களிடம் இருந்து பணத்தை பறிக்க மட்டுமே நினைக்கிறது. அரசு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி அவர்களின் சுமையை அதிகரிக்கிறது. பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்திய மாநில அரசின் முடிவை காங்கிரஸ் கண்டிக்கிறது. கர்நாடக பால் கூட்டமைப்பு, அரசின் ஓர் அங்கம் ஆகும். பால் விலை உயர்வு முடிவை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வாபஸ் பெறவில்லை. விரைவில் பால் விலை உயர்வு குறித்து முடிவு எடுக்கப்படும் என்று அறிக்கை மட்டும் வெளியிட்டுள்ளார்.
ரூ.38 சம்பாதித்து வந்தனர்
பா.ஜனதா அரசு பொறுப்பேற்ற பிறகு, அவர்களிடமிருந்து மக்களுக்கு பயனுள்ள திட்டங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்த காலத்தில், பால் பண்ணையாளர்கள் லிட்டர் ஒன்றுக்கு ரூ.38 சம்பாதித்து வந்தனர். விலை உயர்த்தப்படவில்லை, மானியமும் இல்லை. ஆனால், பொதுமக்களுக்கு தற்போது விலைவாசி உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது.
பால் விலை உயர்வு குறித்து அரசு தெளிவுபடுத்த வேண்டும். விலை உயர்வு முடிவை திரும்ப பெற வேண்டும். வாக்காளர்கள் பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இதை வாக்காளர்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
16 ஆயிரம் வாக்காளர்கள்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆதார் அட்டை கட்டாயம் இல்லை. ஆனால் உள்ளூர் அதிகாரிகள் ஆதார் அட்டையை கேட்கிறார்கள். இது இளைஞர்களின் வாக்களிக்கும் உரிமையை மறுப்பதாக உள்ளது. எனது தொகுதியில் 16 ஆயிரம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு பெற உள்ளேன். சூரத்கல் சுங்கச்சாவடி இன்னும் அகற்றப்படவில்லை. ஆனால் விரைவில் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மங்களூரு மக்களுக்கு கிடைத்த வெற்றி.
இவ்வாறு அவர் கூறினார்.