தலித் பெண்ணை தாக்கிய விவகாரம்: மந்திரி டி.சுதாகரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்


தலித் பெண்ணை தாக்கிய விவகாரம்: மந்திரி டி.சுதாகரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தலித் பெண்ணை தாக்கிய விவகாரத்தில் மந்திரி டி.சுதாகரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரு:

நில பிரச்சினை தொடர்பாக திட்டமிடல் மற்றும் புள்ளியல் துறை மந்திரி டி.சுதாகர் பெங்களூரு எலகங்காவை சேர்ந்த தலித் பெண்ணை தாக்கியதாக அவர் மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் மந்திரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் மந்திரியால் தாக்குதலுக்கு உள்ளான தலித் பெண் முனியம்மா என்பவரின் வீட்டிற்கு நேற்று பா.ஜனதா தலைவர்கள் நேரில் சென்று ஆறுதல் கூறினர். அதன் பிறகு முன்னாள் மந்திரி கோவிந்த் கார்ஜோள் நிருபர்களிடம் கூறியதாவது:-

தலித் மக்களின் சொத்துக்களை மந்திரியே ஆக்கிரமிக்க முயற்சி செய்வது வெட்கக்கேடானது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிறது. இதில் இந்த சம்பவம் ஒரு கரும்புள்ளி. மந்திரி டி.சுதாகரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். தலித் பெண்ணின் சொத்தை அபகரித்து தாக்கியது கண்டிக்கத்தக்கது. இந்த அரசு தலித் மக்களை பாதுகாக்க வந்துள்ளதா? அல்லது தாக்குதல் நடத்த வந்துள்ளதா? என்பது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா விளக்க வேண்டும்.

இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.

பா.ஜனதா எஸ்.சி. அணி தலைவர் சலவாதி நாராயணசாமி கூறுகையில், "டி.சுதாகர் பிரச்சினைக்குரிய நிலம் மீது ரூ.25 கோடி கடன் வாங்கியுள்ளார். வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த நிலத்தை தனது பெயருக்கு பத்திரப்பதிவு செய்து கொண்டுள்ளார். இது மோசடி விவகாரம். இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும். அதற்காக நாங்கள் இங்கு வந்துள்ளோம். டி.சுதாகரை மந்திரி பதவியை விட்டு நீக்க வேண்டும்" என்றார்.


Next Story