கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக மந்திரி உமேஷ்கட்டி ஆற்றிய பணி எப்போதும் நினைவில் நிற்கும்- பிரதமர் மோடி புகழஞ்சலி


கர்நாடகத்தின் வளர்ச்சிக்காக மந்திரி உமேஷ்கட்டி ஆற்றிய பணி எப்போதும் நினைவில் நிற்கும்- பிரதமர் மோடி புகழஞ்சலி
x

மந்திரி உமேஷ்கட்டி கர்நாடக வளர்ச்சிக்கு ஆற்றிய பணி எப்போதும் நினைவில் நிற்கும் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பெங்களூரு: மந்திரி உமேஷ்கட்டி கர்நாடக வளர்ச்சிக்கு ஆற்றிய பணி எப்போதும் நினைவில் நிற்கும் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி

உணவு மற்றும் வனத்துறை மந்திரி உமேஷ்கட்டி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, கவர்னர் தாவர்சந்த் கெலாட், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'மந்திரி உமேஷ்கட்டி மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகுந்த துக்கம் அடைந்தேன். அவர் கர்நாடகத்தின் வளர்ச்சிக்கு ஆற்றியுள்ள பணி எப்போதும் நினைவில் நிற்கும். அவர் உடல் ரீதியாக நம்முடன் இல்லாவிட்டாலும் நமது மனதில் நீடித்து நிலைத்து இருப்பார். அவரது இழப்பால் வாடும் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கு பலம் கொடுக்க இறைவனிடம் வேண்டுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

குரல் அடங்கிவிட்டது

கவர்னர் தாவர்சந்த் கெலாட் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 'உணவுத்துறை மந்திாி உமேஷ்கட்டியின் மரணம் மிகுந்த துக்கத்தை தந்துள்ளது. அவரது ஆத்மாவுக்கு அமைதி கிடைக்கவும், குடும்பத்தினருக்கு இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் வழங்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ள அறிக்கையில், 'மந்திரி உமேஷ்கட்டி திடீரென இறந்தது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட கர்நாடகத்தின் குரலாக இருந்தார். அவரது மரணம் மூலம் அந்த குரல் அடங்கிவிட்டது. அவர் எனது உடன்பிறவா சகோதரர். அவர் விவசாயிகளின் நலனில் சிறப்பு கவனம் செலுத்தினார். கூட்டுறவுத்துறையின் மேம்பாட்டிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். அனைவரிடமும் அன்பாக பழகினார். அவரது ஆத்மா அமைதி பெற வேண்டுகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார். இதுபோல் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் முதல்-மந்திரிகள் எடியூரப்பா, குமாரசாமி உள்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள், மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், மடாதிபதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story