மந்திரிகள் சோமண்ணா, நாராயணகவுடா காங்கிரசில் சேருகிறார்கள்?
மந்திரிகள் சோமண்ணா, நாராயணகவுடா ஆகியோர் காங்கிரசில் சேருவது குறித்து டி.கே.சிவக்குமார் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
பெங்களூரு:-
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஆதரவு அளிக்க வேண்டும்
கர்நாடகத்தில் பா.ஜனதா அரசின் ஊழல்களால் நமது மாநிலத்திற்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தின் தன்மானத்தை காக்க காங்கிரஸ் தீவிரமாக போராடி வருகிறது. வருகிற 9-ந் தேதி அன்று பா.ஜனதா அரசின் ஊழல்களை கண்டித்து 2 மணி நேரம் முழு அடைப்பு நடத்த ஏற்கனவே முடிவு செய்துள்ளோம். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்.
கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், திட்ட பணிகளுக்கு கூடுதல் மதிப்பீடு செய்து நிதி ஒதுக்கி ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பணத்தை பறித்து முறைகேடு செய்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிப்பதற்குள் எந்த அளவுக்கு பணம் பறிக்க வேண்டுமோ, அந்த அளவுக்கு பணத்தை பறிக்க மந்திரிகள் முயற்சி செய்து வருகிறார்கள். இதுகுறித்து தலைமை செயலாளருக்கு கடிதம் எழுதுவேன்.
கேள்வி எழுப்பவில்லை
சித்தராமையா ஆட்சி காலத்தில் விருந்தினர்கள் உபசரிப்புக்கு பயன்படுத்திய நிதியில் முறைகேடு நடந்துள்ளதாக பா.ஜனதாவினர் கூறுகிறார்கள். இதுகுறித்து அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்தபோது ஏன் கேள்வி எழுப்பவில்லை. கடந்த 3½ ஆண்டுகளாக பா.ஜனதா அரசு வாய் திறக்காமல் இருந்தது ஏன்?. தவறு நடந்திருந்தால் விசாரணை நடத்த வேண்டியது தானே?.
எனக்கு எதிராகவும் ஊழல் புகார்களை கூறியுள்ளனர். ஆதாரங்கள் இருந்தால் விசாரணை நடத்தட்டும். அதை எதிர்கொள்ள நான் தயாராக உள்ளேன். லோக்அயுக்தா அமைப்பு பா.ஜனதா ஆட்சி காலத்தில் தான் தொடங்கப்பட்டது போல் அக்கட்சியினர் பேசுகிறார்கள். ராமகிருஷ்ணா ஹெக்டே முதல்-மந்திரியாக இருந்தபோது அந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அது தன்னிச்சையாக செயல்படும் அமைப்பு ஆகும்.
விரைவுச்சாலை
பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலை திட்டம் சித்தராமையா ஆட்சி காலத்தில் தயாரிக்கப்பட்டது. அதற்கு அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதி அளித்தது. அந்த சாலை தரமான முறையில் அமைக்கப்படவில்லை. கிராமங்கள் உள்ள பகுதியில் சர்வீஸ் ரோடு அமைக்கவில்லை. இதனால் கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மந்திரி நராயணகவுடா காங்கிரசில் சேருவது குறித்து எந்த விவாதமும் நடத்தப்படவில்லை. கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்கிறார்கள். அதே போல் மந்திரி சோமண்ணா காங்கிரசில் இணைவது குறித்தும் எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை. அவர் கனகபுராவில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்துள்ளார். அதில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதில் பங்கேற்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.