பள்ளி கழிவறைக்கு இழுத்துச்சென்று மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள் - கொடூர சம்பவம்


பள்ளி கழிவறைக்கு இழுத்துச்சென்று மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள் - கொடூர சம்பவம்
x

வகுப்புக்கு செல்லும்போது மாணவி சீனியர் மாணவர்கள் மீது தெரியாமல் மோதியுள்ளார்.

டெல்லி,

டெல்லியில் மாணவியை பள்ளி கழிவறைக்கு இழுத்துச்சென்று மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி போலீசில் அளித்துள்ளார். டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளியில் 11 வயது மாணவி பயின்று வருகிறார். அந்த மாணவி வகுப்பறைக்கு செல்லும்போது எதிர்பாராத விதமாக 2 சீனியர் மாணவர்கள் மீது தெரியாமல் மோதியுள்ளார்.

இதையடுத்து, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் அந்த 2 சீனியர் மாணவர்களிடம் அந்த மாணவி மன்னிப்புகேட்டுள்ளார். ஆனால், ஆத்திரமடைந்த அந்த இரு மாணவர்களும் மாணவியை கடுமையாக தாக்கியுள்ளனர்.

பின்னர், அந்த மாணவியை பள்ளிக்கூட கழிவறைக்கு இழுத்து சென்றுள்ளனர். கழிவறையின் உள்பக்கமாக பூட்டிய மாணவர்கள் அந்த மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக கூறி இந்த விவகாரத்தை பள்ளி நிர்வாகம் மூடி மறைத்துள்ளது.

இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் அரங்கேறியுள்ளது. சீனியர் மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி தற்போது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகார் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் இந்த விவகாரத்தை டெல்லி மகளிர் ஆணையம் கையில் எடுத்துள்ளது.

பள்ளிக்கூட கழிவறையில் மாணவி சீனியர் மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை மறைத்தது ஏன்? இது தொடர்பாக ஏன் புகார் அளிக்கவில்லை? என்பது குறித்து கேந்திர வித்யாலயா பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவர்கள், சம்பவத்தை மறைத்த பள்ளி ஆசிரியர்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, பள்ளிக்கூடத்தில் மாணவி சீனியர் மாணவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் மாணவர்கள் மற்றும் சம்பவத்தை மறைத்த பள்ளி நிர்வாகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது.

தெரியாமல் இடித்ததால் ஆத்திரமடைந்த சீனியர் மாணவர்கள் பள்ளி கழிவறைக்கு இழுத்து சென்று மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் டெல்லி மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.


Next Story