டெல்லியில் 10 ம் வகுப்பு மாணவி ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் ; 3 பேர் கைது
டெல்லியில் 16 வயது சிறுமியை ஓடும் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த மூன்று பேர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி,
டெல்லியில் 10ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமியை ஓடும் காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக மூன்று பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் இரண்டு பேர் ஏற்கனவே சிறுமிக்கு அறிமுகமானவர்கள் என்றும், காரில் சுற்றி பார்க்கலாம் என்று கூறி அந்த சிறுமியை அவர்கள் ஏமாற்றி அழைத்துக் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்
சிறுமியை தெற்கு டெல்லியில் உள்ள வசந்த் விஹாரிலிருந்து அண்டை மாநிலமான உத்தரபிரதேசத்தில் உள்ள காஜியாபாத் வரை சுமார் 44 கிலோமீட்டர் தூரம் அழைத்து சென்று உள்ளனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மது அருந்தி விட்டு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். சிறுமிக்கும் மதுவை கொடுத்து உள்ளனர்.மேலும் கார் நகரத்தை சுற்றி வந்தபோது சிறுமியை அடித்து உதைத்து உள்ளனர். சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதை வீடியோவும் எடுத்துள்ளனர்.