27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் உலக அழகிப்போட்டி இந்த ஆண்டு நடக்கிறது அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்தியாவில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு ‘மிஸ் வேர்ல்ட்’ உலக அழகிப் போட்டி இந்த ஆண்டு நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
புதுடெல்லி,
இந்தியாவில் 'மிஸ் வேர்ல்ட் ' உலக அழகிப் போட்டி கடைசியாக 1996-ம் ஆண்டு நடந்தது. பெங்களூருவில் நடந்த இறுதிப்போட்டியில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த அழகி ஐரீன் ஸ்கிலிவா பட்டம் வென்றார்.
அதன்பிறகு இந்தியாவில் இந்த உலக அழகிப்போட்டி நடக்கவே இல்லை. 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு உலக அழகிப்போட்டி இந்தியாவில் நடக்க உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகி உள்ளன. இதையொட்டி, 'மிஸ் வேர்ல்ட்' உலக அழகிப்போட்டி அமைப்பின் தலைவரான ஜூலியா மோர்லி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
71-வது உலக அழகிப்போட்டியின் இறுதிப்போட்டி இந்தியாவில் நடக்க உள்ளது என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.
ஒரு மாதம் நடக்கிற இந்தப் போட்டியில், 130 நாடுகளின் அழகிகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மிகவும் அற்புதமான உலக அழகி இறுதிப் போட்டியை நாங்கள் வழங்குகிறோம்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் போட்டி நவம்பர் மாதம் நடைபெறுகிறது. ஆனால் தேதி இன்னும் முடிவாக வில்லை.
கடந்த ஆண்டின் உலக அழகியான போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா, இந்தப்போட்டி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தியா வந்துள்ளார். அவர் கூறும்போது, "இந்த அழகான நாட்டில் நடைபெறுகிற உலக அழகிப்போட்டியில் எனது கிரீடத்தை ஒப்படைப்பதற்கு மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். ஒட்டுமொத்த உலகிலேயே விருந்தோம்பலில் மாபெரும் நாடு இந்தியாதான். இங்கு நான் இரண்டாவது முறையாக வந்துள்ளேன். இது எனது சொந்த வீடு என்ற உணர்வைத் தருகிறது. உங்கள் மிகுந்த மதிப்புக்குரிய குடும்பம், மரியாதை, அன்பு, இரக்கம் ஆகியவற்றை நாங்கள் உலகுக்குக் காட்ட விரும்புகிறோம். இங்கே பார்ப்பதற்கு இன்னும் நிறைய இருக்கிறது, ஒரு மாத காலத்துக்கு உலகம் முழுவதையும் இங்கு வரவழைத்து, இந்தியா வழங்கக்கூடிய அனைத்தையும் காண்பிப்பது சிறந்த யோசனை" என தெரிவித்தார்.
தற்போதைய 'மிஸ் இந்தியா வேர்ல்ட்' அழகி சினி ஷெட்டி, இந்தப் போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொள்ள உற்சாகத்துடன் காத்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, "உலகமெங்கும் இருந்து வருகிற எனது எல்லா சகோதரிகளையும் நான் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவேன், அவர்களிடம் இந்தியா உண்மையிலேயே எதற்காக நிற்கிறது, இந்தியாவின் பன்முகத்தன்மை என்ன என்பதையெல்லாம் காட்டுவேன். இந்தப் பயணத்தில் நானும் இருக்கிறேன் என்பது உண்மையிலேயே உற்சாகம் அளிக்கிறது" என தெரிவித்தார்.
இந்தியா இந்த உலக அழகிப்போட்டியில் 6 முறை பட்டம் வென்றிருக்கிறது. ரீட்டா பரியா (1966), ஐஸ்வர்யா ராய் (1994), டயானா ஹைடன் (1997), யுக்தா முகி (1999), பிரியங்கா சோப்ரா (2000), மனுஷி சில்லர் (2017) ஆகியோர் உலக அழகிகளாகி இந்தியாவுக்கு மேலும் அழகு சேர்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.