எங்கே போகிறது சமூகம்..? 8 வயது சிறுமியை இழுத்துச் சென்று சீனியர் மாணவர்கள் செய்த கொடூரம்
மோப்பநாய் உதவியுடன் துப்பு துலக்கியபோது, மேப்பநாய் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்களிடம் அழைத்துச் சென்றது.
ஐதராபாத்:
ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் முச்சுமரி பகுதியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்த சிறுமி (வயது 8) கடந்த ஞாயிற்றுக்கிழமை காணாமல் போனாள். பார்க்கில் விளையாடச் சென்ற சிறுமி, வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் பெற்றோர் தரப்பில் முச்சுமரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடத் தொடங்கினர். முதலில் உள்ளூர் மக்களிடம் விசாரித்தனர். எந்த துப்பும் கிடைக்கவில்லை. அதன்பின்னர் மோப்பநாய் உதவியுடன் துப்பு துலக்கியபோது, மேப்பநாய் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று சிறுவர்களிடம் அழைத்துச் சென்றது. அவர்களில் 2 பேர் 6-ம் வகுப்பு மாணவர்கள், ஒருவன் 7-ம் வகுப்பு படிக்கிறான். காணாமல் போன சிறுமி படித்த அதே பள்ளியில் இந்த சிறுவர்கள் படிக்கிறார்கள்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியானது. மூன்று சிறுவர்களும் சேர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.
பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, முச்சுமரி அணைக்கு அருகில் உள்ள ஒதுக்குப்புறமான பகுதிக்கு இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுபற்றி சிறுமி தன் பெற்றோரிடம் கூறினால் பிரச்சினையாகிவிடும் என்ற பயத்தில் சிறுமியை கொன்று அருகில் உள்ள கால்வாயில் உடலை வீசியுள்ளனர்.
சிறுவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், சிறுமியின் உடலை தேடும் பணி நடைபெறுகிறது.
இது குறித்து முச்சுமாரி சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்சேகர் கூறுகையில், சிறுமியின் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால், காணாமல் போனதாகவே வழக்கு பதிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.
விஞ்ஞானம், தொழில்நுட்பம், வளர்ச்சி என ஒருபுறம் மனித சமூகம் முன்னேற்றத்தை நோக்கி பயணித்தாலும், மறுபுறம் வன்முறைகளும் வக்கிரங்களும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. குறிப்பாக, இன்றைய இளம் தலைமுறையினரிடையே பரவி உள்ள மதுப்பழக்கம் மற்றும் போதைப்பழக்கம் பாலியல் வக்கிர எண்ணங்களால் சமூகம் சீர்கெட்டு போய்க் கொண்டிருக்கிறது.