ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கில் எம்.எல்.ஏ. மகனை 'பொறி' வைத்து பிடித்த லோக் அயுக்தா போலீசார்


ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கில் எம்.எல்.ஏ. மகனை பொறி வைத்து பிடித்த லோக் அயுக்தா போலீசார்
x

ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கில் எம்.எல்.ஏ.வின் மகனை லோக் அயுக்தா போலீசார் ரகசியமாக கண்காணித்து பொறி வைத்து பிடித்த தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

ஐ.ஜி.யிடம் புகார்

மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசாயனம் சப்ளை செய்ய ஒப்பந்ததாரருக்கு டெண்டர் வழங்க ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கிய போது பா.ஜனதா எம்.எல்.ஏ. விருபாக்ஷப்பாவின் மகனும், அரசு அதிகாரியுமான பிரசாந்தை நேற்று முன்தினம் லோக் அயுக்தா போலீசார் கைது செய்திருந்தனர். இந்த சோதனையை லோக் அயுக்தா போலீசார் ரகசியமாக வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

அதாவது மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் வாரியத்தின் தலைவராக இருந்த மாடால் விருபாக்ஷப்பா, அவரது மகன் பிரசாந்த், ரசாயன நிறுவனத்தின் உரிமையாளரான ஸ்ரேயசிடம் ரூ.81 லட்சம் லஞ்சம் கேட்டு இருந்தனர். லஞ்சம் கொடுக்க விரும்பாத ஸ்ரேயஷ், இதுபற்றி லோக் அயுக்தா போலீஸ் ஐ.ஜி. சுப்பிரமணிஷ்வர் ராவிடம் புகார் அளித்திருந்தார். இதுபற்றி லோக் அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு அசோக்கிடம், சுப்பிரமணிஷ்வர் ராவ் தகவல் தெரிவித்தார்.

5 நாட்கள் கண்காணிப்பு

அதாவது ஸ்ரேயசிடம் இருந்து லஞ்சம் வாங்கும் போது பிரசாந்தை கையும், களவுமாக கைது செய்ய வேண்டும் என்பதால், இந்த விவகாரத்தை வெளியே கசிந்து விடாமல் 2 அதிகாரிகளும் ரகசியமாக வைத்து நடவடிக்கை எடுத்தார்கள். கடந்த 5 நாட்களாக பிரசாந்தை லோக் அயுக்தா போலீசார் ரகசிய கண்காணித்து வந்துள்ளனர். கடந்த 2-ந் தேதி ரூ.40 லட்சத்தை கொடுக்க கிரசென்ட் ரோட்டில் உள்ள தன்னுடைய தந்தையின் அலுவலகத்திற்கு வரும்படி ஸ்ரேயசிடம் பிரசாந்த் கூறி இருந்தார்.

இதுபற்றி அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு அசோக் தலைமையில், லோக் அயுக்தா போலீசார் சோதனை நடத்திய பிரசாந்தை கைது செய்திருந்தார்கள். அதாவது மாலை 6.30 மணியளவில் ஸ்ரேயஷ் ரூ.40 லட்சத்தை கொடுத்த அடுத்த சில நிமிடத்திலேயே சோதனை நடத்தி, கையும், களவுமாக சிக்க வைத்திருந்தார்கள். அதே நேரத்தில் அலுவலகத்தில் சோதனை நடத்துவதற்கு முன்பாக பிரசாந்த் வீடு சஞ்சய்நகர் அருகே டாலர்ஸ் காலனியில் இருப்பதையும் போலீசார் உறுதி செய்தனர்.

ரூ.1.62 கோடி கூடுதலாக...

அங்குள்ள ஆவணங்கள் எதுவும் மாயமாகி விடக்கூடாது என்பதற்காக, அங்கும் ஒரு தனிப்படை போலீசார் சென்று சோதனை நடத்தியது தெரியவந்துள்ளது. ரூ.40 லட்சத்திற்காக நடத்தப்பட்ட இந்த சோதனையின் போது எம்.எல்.ஏ. அலுவலகத்தில் மற்றொரு டெண்டருக்காக லஞ்சம் கொடுக்க ஒரு ரசாயன நிறுவனத்தை சேர்ந்த அல்பர்ட் நிகோலா, கங்காதர் ஆகிய 2 பேரும் இருந்தனர்.

அவர்கள் தங்களது நிறுவனத்திற்கு டெண்டர் பெறுவதற்காக பிரசாந்திடம் கொடுக்க ரூ.1.62 கோடியை எடுத்து வந்திருந்தனர். இதையடுத்து, அந்த ரூ.1.62 கோடி, ரூ.40 லட்சம் என ஒட்டு மொத்தமாக ரூ.2 கோடியே 2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் லஞ்சம் கொடுக்க முயன்றதாக அல்பர்ட் நிகோலா, கங்காதரையும் லோக் அயுக்தா போலீசார் கைது செய்திருந்தார்கள்.


Next Story