மாடால் விருபாக்ஷப்பாவுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்


மாடால் விருபாக்ஷப்பாவுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல்
x

ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கில் கைதான மாடால் விருபாக்‌ஷப்பாவுக்கு 5 நாட்கள் போலீஸ் காவல் வழங்கி பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:-

ரூ.40 லட்சம் லஞ்சம்

தாவணகெரே மாவட்டம் சென்னகிரி தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக இருப்பவர் மாடால் விருபாக்ஷப்பா. இவர், மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் வாரிய தலைவராகவும் இருந்தார். இவரது மகன் பிரசாந்த். இவர், குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தில் தலைமை கணக்கு அதிகாரியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில், மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் நிறுவனத்திற்கு ரசானயம் சப்ளை செய்வதற்காக டெண்டர் விவகாரத்தில் பிரசாந்த் காண்டிராக்டர்களிடம் இருந்து ரூ.40 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து காண்டிராக்டர் கொடுத்த தகவலின் பேரில் லோக் அயுக்தா போலீசார், பிரசாந் அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது அவர் கையும், களவுமாக பிடிபட்டார்.

ரூ.8 கோடி

இதையடுத்து அவரது வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.7.72 கோடி சிக்கி இருந்தது. ஒட்டு மொத்தமாக ரூ.8 கோடியே 12 லட்சம் ரொக்கம் உள்பட முக்கிய ஆவணங்கள் சிக்கின. இதையடுத்து, மைசூரு சாண்டல் சோப்பு மற்றும் டிடர்ஜென்ட் வாரிய தலைவர் பதவியை மாடால் விருபாக்ஷப்பா ராஜினாமா செய்தார்.

இதையடுத்து, ரூ.40 லட்சம் லஞ்ச வழக்கில் மாடால் விருபாக்ஷப்பா முதல் குற்றவாளியாகவும், 2-வது குற்றவாளியாக பிரசாந்தும் சேர்க்கப்பட்டனர். இதுதொடர்பாக பிரசாந்த் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தற்போது பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கைது

இதற்கிடையே மாடால் விருபாக்ஷப்பா தலைமறைவானார். மேலும் முன்ஜாமீன் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து அவருக்கு ஐகோர்ட்டு முன்ஜாமீன் வழங்கியது. மேலும் லோக் அயுக்தா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தியது. இதனால் அவர் லோக் அயுக்தா அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி வந்தார். ஆனால் விசாரணையின்போது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை என கூறப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாடால் விருபாக்ஷப்பாவின் முன்ஜாமீனை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதையடுத்து லோக் அயுக்தா போலீசாா் மாடால் விருபாக்ஷப்பாவை கைது செய்தனர்.

5 நாட்கள் காவல்

இதையடுத்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுக்க லோக் அயுக்தா முடிவு செய்தது. அதன்படி நேற்று மாடால் விருபாக்ஷப்பாவை, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மேலும் அவரை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு கோரினர். அப்போது நீதிபதி லஞ்ச வழக்கு தொடர்பாக, மாடால் விருபாக்ஷப்பாவை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லோக்அயுக்தா போலீசாருக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து லோக் அயுக்தா போலீசார் மாடால் விருபாக்ஷப்பாவை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைசுற்றல்

முன்னதாக கோர்ட்டில் விசாரணை நடைபெற்றபோது, தனக்கு தலை சுற்றுவதாக மாடால் விருபாக்ஷப்பா கூறினார். மேலும் தன்னை அமருவதற்கு அனுமதிக்குமாறு நீதிபதியிடம் கோரினார். அவரை நீதிபதி அமர் அனுமதித்ததையடுத்து, மாடால் விருபாக்ஷப்பா சற்று அமர்ந்து ஓய்வு எடுத்தார்.


Next Story