ஜனநாயகத்தை பற்றி மத்திய அரசு பேசுகிறது, செயல்படுவதில்லை - காங்கிரஸ் தலைவர் கார்கே தாக்கு
ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிற மத்திய அரசு, அதன்படி செயல்படுவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கூறினார்.
புதுடெல்லி,
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்தியில் அமைந்துள்ள பா.ஜ.க. அரசு, ஜனநாயகத்தை பற்றி நிறைய பேசுகிறது. ஆனால் அதன்படி செயல்படுவதில்லை. ஜனநாயகத்துக்காகவும், அரசியல் சாசனத்துக்காகவும் எதிர்க்கட்சிகள் கூட்டாக போராடுகிறோம்.
ரூ.50 லட்சம் கோடி பட்ஜெட், வெறும் 12 நிமிடங்களில் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு ஆர்வம் இல்லை, அவர்கள் சபையில் இடையூறு செய்கிறார்கள் என்று அவர்கள் (பா.ஜ.க.) குற்றம் சாட்டுகிறார்கள்.
பேச அனுமதி இல்லை
சபையில் இடையூறு செய்தது, ஆளும் பா.ஜ.க.தான். நாங்கள் பேசுவதற்கு கோரிக்கை விடுத்தபோதெல்லாம், எங்களுக்கு அனுமதி இல்லை. இப்படி நேர்ந்திருப்பது எனது 52 ஆண்டு கால பொது வாழ்க்கையில், இதுதான் முதல் முறை.
மத்திய அரசின் நோக்கம், பட்ஜெட் அமர்வில் எந்த விவாதமும் நடைபெறக்கூடாது என்பதுதான். இது தொடர்ந்தால், ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும், சர்வாதிகாரத்தை நோக்கி செல்லும் நிலை வந்து விடும்.
அதானி விவகாரம்
அதானி விவகாரத்தை 18, 19 கட்சிகள் எழுப்பினோம். அவரது சொத்துக்கள் ரூ.12 லட்சம் கோடி என்ற அளவுக்கு வெறும் 2 அல்லது 2½ ஆண்டு காலத்தில் அதிகரித்தது எப்படி என்றுதான் கேட்கிறோம்.பா.ஜ.க. எம்.பி.க்கள்தான் பெரும்பான்மையாக பங்கு வகிப்பார்கள் என்ற நிலையிலும், அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த எதற்காக பயப்படுகிறீர்கள்? ஒன்றும் புரியவில்லை, குழப்பமாக இருக்கிறது.
நாடாளுமன்றத்தில் அதானி விவகாரத்தில் மத்திய அரசு பதில் அளிக்கவில்லை. மாறாக இங்கிலாந்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சுக்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி கவனத்தை திசை திருப்பினார்கள்.
அதானி விவகாரத்தில் ஆவணங்களைப் பார்ப்பதற்கு எதிர்க்கட்சி எம்.பி.க்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்பதால், இந்த விவகாரத்தில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்கிறோம்.
ராகுல் பதவி பறிப்பு
ராகுல் காந்தியின் எம்.பி. பதவி மின்னல் வேகத்தில் பறிக்கப்பட்டது. ஆனால் பா.ஜ.க. எம்.பி.க்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து 16 நாட்களான பின்னும் எம்.பி. பதவி பறிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்.