பிரதமர் மோடி மைசூரு வந்தார்
பந்திப்பூர் புலிகள் காப்பக பொன் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி மைசூரு வருகை தந்துள்ளார். புலிகள் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட உள்ளார்.
பெங்களூரு:
பந்திப்பூர் புலிகள் காப்பக பொன் விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி மைசூரு வருகை தந்துள்ளார். புலிகள் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட உள்ளார்.
பிரதமர் மோடி வருகை
கர்நாடக சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கர்நாடகத்திற்கு 7 முறை பிரதமர் மோடி வந்துள்ளார். இந்த நிலையில், சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டையில் உள்ள பந்திப்பூர் தேசிய புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இதையடுத்து, 50-வது ஆண்டு பொன்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதுடன், புலிகள் காப்பக நினைவு சின்னத்தையும் அவர் வெளியிட்டு உறையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று இரவு தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி மைசூரு மாவட்டத்திற்கு வருகை தந்தார். மைசூருவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மைசூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி நேற்று இரவு தங்கி ஓய்வெடுத்தார்.
புலிகள் காப்பக பொன் விழா
இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.20 மணியளவில் ஓட்டலில் இருந்து காரில் ஓவெல் மைதானத்திற்கு பிரதமர் மோடி செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக அவர் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா மேலுகாமனஹள்ளிக்கு செல்ல உள்ளார். காலை 7.15 மணியளவில் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் பிரதமர் மோடி சபாரி செல்கிறார்.
பந்திப்பூர் வனப்பகுதியில் 15 கிலோ மீட்டர் தூரம் சபாரி சென்று வனவிலங்களை பிரதமர் மோடி பார்வையிடுகிறார். காலை 9.30 மணி வரை அவர் சபாரி மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தின் 50-வது ஆண்டு பொன் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
புலிகள் கணக்கெடுப்பு அறிக்கை
இந்த நிகழ்ச்சியின் போது கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட புலிகள் கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை பிரதமர் மோடி வெளியிட உள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு வெளியான புலிகள் கணக்கெடுப்பில் நாட்டிலேயே கர்நாடகம் 2-வது இடத்தில் இருந்தது. பிரதமர் மோடி இன்று வெளியிடும் கணக்கெடுப்பு அறிக்கையின் மூலம் புலிகள் அதிகம் உள்ள மாநிலங்களில் கர்நாடகம் முதலிடத்தை பிடிக்க வாய்ப்புள்ளது.
பந்திப்பூர் நிகழ்ச்சியை முடித்து தமிழ்நாடு நீலகிரி மாவட்டம் முதுமலைக்கு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் செல்கிறார். அங்கிருந்து மீண்டும் அவர் ஹெலிகாப்டரில் புறப்பட்டு மதியம் 12.10 மணியளவில் மைசூரு விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார். மைசூருவில் இருந்து தனி விமானத்தில் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டு செல்ல இருக்கிறார்.
பலத்த பாதுகாப்பு
பிரதமர் வருகையையொட்டி மைசூரு மற்றும் சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பந்திப்பூர் புலிகள் காப்பகத்திற்கு மக்கள் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வனத்துறை கூடுதல் இயக்குனர் எஸ்.பி.யாதவ் கூறுகையில், பந்திப்பூர் புலிகள் காப்பகம் 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 18 ஆயிரத்து 278 சதுர கிலோ மீட்டரில் முதலில் 9 புலிகள் விடப்பட்டு இருந்தது. தற்போது 75 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 53 புலிகள் உள்ளன என்றார்.