பெங்களூருவில் பிரதமர் மோடி ஊர்வலம்: போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
பெங்களூருவில் பிரதமர் மோடியின் ஊர்வலம் நடைபெற உள்ளதால், பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலை தடுப்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன், மாநகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
பெங்களூரு:
பெங்களூருவில் பிரதமர் மோடியின் ஊர்வலம் நடைபெற உள்ளதால், பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசலை தடுப்பது குறித்து உயர் போலீஸ் அதிகாரிகளுடன், மாநகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
பிரதாப் ரெட்டி ஆலோசனை
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் மோடி கர்நாடகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 7-ந் தேதி வரை தொடர்ந்து 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார். குறிப்பாக நாளை(6-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள்(7-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் பெங்களூருவில் திறந்த வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலம் செல்ல உள்ளார். பெங்களூருவில் 36 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ஊர்வலம் நடைபெற இருக்கிறது. மைசூருவில் பிரதமர் ஊர்வலத்தின் போது வாகனத்தின் மீது செல்போன் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, பெங்களூருவில் பிரதமர் மோடியின் ஊர்வலத்தின் போது எந்த விதமான பாதுகாப்பு பிரச்சினைகளும் ஏற்படக்கூடாது என்று நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் உள்ள சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் அதிகாரிகளுடன், மாநகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி ஆலோசனை நடத்தினார். பிரதமரின் பாதுகாப்புக்காக தமிழ்நாடு, ஆந்திராவில் இருந்தும் போலீசாரை அழைத்து வர தீர்மானிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளுடன்...
பெங்களூருவில் நேற்று போக்குவரத்து போலீஸ் சிறப்பு கமிஷனர் எம்.ஏ.சலீம், போக்குவரத்து இணை கமிஷனர் அனுஜித் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளுடன், பிரதாப் ரெட்டி ஆலோசனை நடத்தினார்.
பிரதமரின் ஊர்வலத்தையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு கொடுக்காத வண்ணமும், முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்வது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. ஏனெனில் நகரின் முக்கியமான சாலைகளில் பிரதமர் மோடி ஊர்வலம் நடைபெற இருப்பதால், அதற்கு தேவையான நடவடிக்கைளை எடுக்கும்படி உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு, பிரதாப் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.