ரூ. 32 கோடி பறிமுதல்: ஜார்க்கண்ட் மந்திரிக்கு அமலாக்கத்துறை சம்மன்
ஜார்க்கண்ட் மந்திரியின் உதவியாளர், பணியாளர் வீடுகளில் 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநில கிராமப்புற வளர்ச்சித்துறை மந்திரி ஆலம்கிர் ஆலம். கிராமப்புற வளர்ச்சித்துறை சார்பில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களில் பணமோசடி நடைபெற்றதாக ஆலம்கிர் ஆலம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேவேளை, இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கிராமப்புற வளர்ச்சித்துறை தலைமை பொறியாளர் வீரேந்திர ராம் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து, பணமோசடி வழக்கு தொடர்பாக மந்திரி ஆலம்கிர் ஆலமின் உதவியாளர் சஞ்சீவ் லாலின் வீடு, ஆலம்கிர் வீட்டு பணியாளரின் வீடு உள்பட பல்வேறு இடங்களில் கடந்த 6ம் தேதி அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து சஞ்சீவ் லால் மற்றும் ஆலம்கிர் வீடு பணியாளரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், உதவியாளர் மற்றும் பணியாளர் வீடுகளில் மொத்தம் 32 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக மந்திரி ஆலம்கிர் ஆலமிற்கு அமலாக்கத்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக ராஞ்சியில் உள்ள அலுவலகத்திற்கு வரும் செவ்வாய்கிழமை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.