கரிபசவேஸ்வரர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
என்.ஆர்.புராவில் கரிபசவேஸ்வரர் கோவிலில் மர்ம நபர்கள் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் நடந்துள்ளது.
சிக்கமகளூரு:-
கரிபசவேஸ்வரர் கோவில்
சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா தாலுகா சிவமொக்கா நெடுஞ்சாலையில் கரிபசவேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து கோவிலில் இருந்து அர்ச்சகர்களும், ஊழியர்களும் சென்றுவிட்டனர். நேற்று அதிகாலையில் கோவிலுக்கு அர்ச்சகர்களும், ஊழியர்களும் வந்தனர். அப்போது கோவிலின் நுழைவு வாயில் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அர்ச்சகர்களும், ஊழியர்களும் கோவிலுக்குள் சென்று பார்த்தனர்.
உண்டியல் பணம்
அப்போது கோவிலின் கருவறை அருகே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கைகள் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. யாரோ மர்ம நபர்கள் நள்ளிரவில் கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து உண்டியல் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. சமீபத்தில் தான் இந்த கோவிலில் ஒரு திருவிழா நடந்தது. அப்போது கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
இதனால் ரூ.70 ஆயிரம் வரையில் உண்டியல் பணம் திருட்டு போய் இருக்கலாம் என்று அவர்கள் கருதினர். இதுபற்றி அவர்கள் என்.ஆர்.புரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் மோப்ப நாயுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
அதையடுத்து கோவிலில் மோப்பம் பிடித்த நாய் சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதையடுத்து போலீசார் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கிருந்த தடயங்களை பதிவு செய்தனர். பின்னர் அவற்றை ஆய்வுக்காக தடய அறிவியல் பிரிவினருக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து என்.ஆர்.புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.