குரங்கு அம்மை பரவாமல் தடுப்பது எப்படி? - மத்திய அரசு அவசர ஆலோசனை


குரங்கு அம்மை பரவாமல் தடுப்பது எப்படி? - மத்திய அரசு அவசர ஆலோசனை
x

கோப்புப்படம்

இந்தியாவில் 4 பேருக்கு குரங்கு அம்மை தாக்கியுள்ள நிலையில், இதன் பரவலை தடுப்பது குறித்து மத்திய அரசு அவசர ஆலோசனை நடத்தியது.

புதுடெல்லி,

ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பா என அச்சுறுத்தி வந்த குரங்கு அம்மை நோய் ஆசியா கண்டத்திலும் அடியெடுத்து வைத்துள்ளது. 75 நாடுகளில் தொடர் பரவல் காரணமாக சர்வதேச சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கேரளாவில் ஏற்கனவே 3 பேருக்கு இந்த நோய் பாதிப்பு உள்ள நிலையில், புதிதாக டெல்லியிலும் ஒருவருக்கு இதன் தாக்கம் கண்டறியப்பட்டிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், குரங்கு அம்மை நோய் பரவலை தடுப்பது தொடர்பாக மத்திய அரசு நேற்று உயர் மட்டக்கூட்டம் கூட்டி அவசர ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தை சுகாதார அறிவியல்கள் தலைமை இயக்குனர் தலைமை தாங்கி நடத்தினார். சுகாதார அமைச்சக உயர் அதிகாரிகள், நோய் கட்டுப்பாடுக்கான தேசிய மையம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் குரங்கு அம்மை தாக்கம் மேலும் பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகள், பொது சுகாதார நடவடிக்கைகள், கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துதல் தொடர்பாக முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிபுணர்கள் சொல்வது என்ன?

குரங்கு அம்மை பற்றியும், அதன் தாக்கம் குறித்தும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அது பற்றிய ஒரு பார்வை:-

டாக்டர் பிரக்யா யாதவ் (மூத்த விஞ்ஞானி, புனே தேசிய வைராலஜி நிறுவனம்):-

இந்த நோய் பல நாடுகளிலும் தாக்கி இருப்பது கவலைப்பட வைத்துள்ளது. இது மேற்கு ஆப்பிரிக்காவின் திரிபுதான். இந்த வைரஸ் திரிபு, ஒப்பிடுகையில் முதலில் வெடித்த காங்கோ நாட்டின் வைரசை விட தீவிரம் குறைவானதுதான். இந்தியாவில் வெடித்திருப்பதுவும் மேற்கு ஆப்பிரிக்கா வைரஸ் பரம்பரையை சேர்ந்ததுதான்.

டாக்டர் சந்திரகாந்த் லஹாரியா (தொற்றுநோய் நிபுணர்):-

குரங்கு அம்மை புதிய வைரஸ் அல்ல. 50 ஆண்டுகாலமாக இது உள்ளது. இதன் கட்டமைப்பு, பரவல், நோய் கிருமித்தன்மை ஆகியவற்றில் புரிதல் உள்ளது. இந்த வைரஸ் பெரும்பாலும் லேசான பாதிப்பையே ஏற்படுத்துகிறது. கொரோனா போன்றதல்ல. இதை சமாளிக்க முடியும். பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தி விட வேண்டும். பெரியம்மை தடுப்பூசிகளை பயன்படுத்தலாம். குரங்கு அம்மையால் பதறத்தேவையில்லை. வலுவான கண்காணிப்பு, பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தல், தொடர்புகளை கண்டறிதல் மூலம் கட்டுப்படுத்தி விடலாம் என்று அவர்கள் கூறி உள்ளனர்.


Next Story