மூடிகெரேயில் போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
மூடிகெரேயில் போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.
சிக்கமகளூரு:-
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகேரே பகுதியை சேர்ந்தவர் மஞ்சு. இவரை தனது அண்ணன் வீட்டில் திருடியதாக கூறி மூடிகெரே போலீஸ்காரர்களான வசந்த், லோஹித் ஆகியோர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று சரமாரியாக அடித்து தாக்கி உள்ளனர். இந்தநிலையில் மஞ்சு மீது பொய் வழக்கு போட்டு விசாரணைக்காக அழைத்து சென்று அவரை தாக்கி இருப்பதாகவும் இதனால் மஞ்சுவை தாக்கிய போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து வசந்த், லோஹித் ஆகிய 2 போலீஸ்காரர்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமாபிரசாந்த் பணியிடை நீக்கம் செய்தார். இந்தநிலையில் மூடிகெரே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் உமேஷ் என்பவர் வசந்த், லோஹித் ஆகிய போலீஸ்காரர்கள் மீது வழக்கு தொடர வேண்டும் என மஞ்சுவின் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதுகுறித்து மூடிகெரே சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சோமே கவுடாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து அவர் உமேஷ் மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட சூப்பிரண்டிடம் ஆதாரத்துடன் கூறினார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த், போலீஸ்காரர் உமேைஷ பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். போலீசாருக்கு எதிராக செயல்பட்டதால் போலீஸ்காரர் உமேஷ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் தெரிவித்துள்ளார்.