2018-ம் ஆண்டு தேர்தலில் அதிக பெண் வேட்பாளர்கள் போட்டி
200 பெண்கள் டெபாசிட் இழந்தனர்
பெங்களூரு:-
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து தேர்தலில் இருந்து நாடாளுமன்றத்திற்கு நடைபெறும் தேர்தல் வரை பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பேசப்பட்டு வருகிறது. அதன்படி, கர்நாடகத்தில் இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல்களில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டசபைக்கு நடந்த தேர்தலில் தான் அதிக பெண் வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அதன்படி, 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஒட்டு மொத்தமாக அனைத்து கட்சிகள், சுயேச்சைகள் என 221 பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
அவர்களில் 9 பெண்கள் மட்டுமே வெற்றி பெற்று எம்.எல்.ஏ.க்களாக தேர்வாகினர். 200 பெண்கள் மோசமான தோல்வியை சந்தித்து தங்களது டெபாசிட்டை இழந்தனர். ஒரு தேர்தலில் அதிக பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டது கர்நாடக சட்டசபை தேர்தல் வரலாற்றில் புதிய சாதனையாக கருதப்படுகிறது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகள் மற்றும் பிற அரசியல் கட்சிகள் சார்பில் ஏராளமான பெண்கள் போட்டியிட தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.