மின்சாரம் தாக்கி தாய் - 2 மகன்கள் பலி


மின்சாரம் தாக்கி தாய் - 2 மகன்கள் பலி
x

கலபுரகியில், மின்சார தோட்டத்தில் அறுந்து கிடந்த வயரை காலால் மிதித்ததில் மின்சாரம் தாக்கி தாய், 2 மகன்கள் என மொத்தம் 3 பேர் பலியானார்கள்.

பெங்களூரு:

தாய்-2 மகன்கள்

கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி டவுன் தனகரகா பகுதியில் வசித்து வந்தவர் ஜனரம்மா(வயது 45). இவருக்கு சுரேஷ்(22), மகேஷ்(20) என 2 மகன்கள் இருந்தனர். ஜனரம்மாவின் கணவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் ஜனரம்மா, தனது 2 மகன்களுடன் வசித்து வந்தார்.

இவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையில் இவர்கள் வழக்கம்போல் தங்கள் நிலத்தில் விவசாய வேலை செய்வதற்காக புறப்பட்டனர்.

மின்வயரை மிதித்துவிட்டார்

அவர்கள் நிலத்தின் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அமைக்கப்பட்டு இருந்த ஒரு மின்வயர் எதிர்பாராத விதமாக அறுந்து நிலத்தில் விழுந்து கிடந்தது. அதை கவனிக்காத ஜனரம்மா மின்வயரை மிதித்துவிட்டார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதன்காரணமாக அவர் துடிதுடித்தார். அதைப்பார்த்த அவரது மகன்கள் சுரேஷ், மகேஷ் ஆகியோர் தங்களது தாயை காப்பற்ற முயன்றனர்.

அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. ஒரு கட்டத்தில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி சிஞ்சோலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சோகம்

தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ஜனரம்மா, அவரது மகன்கள் சுரேஷ், மகேஷ் ஆகிய 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story