பெற்ற மகளை மிரட்டி, சர்வதேச அளவிலான விபசாரத்தில் தள்ளிய தாய், சகோதரர் கைது


பெற்ற மகளை மிரட்டி, சர்வதேச அளவிலான விபசாரத்தில் தள்ளிய தாய், சகோதரர் கைது
x

பஹ்ரைன், சிங்கப்பூர், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளில் லைவ் ஷோ என கூறி மகளை விபசாரத்தில் ஈடுபடுத்திய தாய் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தின் மீரா பயந்தர் நகரில் ஓம் சாந்தி சவுக் பகுதியை சேர்ந்த வீட்டில் 25 வயது இளம்பெண்ணை வைத்து விபசாரம் நடக்கிறது என தகவல் அறிந்து போலீசார் தனிப்படை அமைத்து சோதனை நடத்த சென்றனர்.

இதில் அந்த பெண்ணை போலீசார் மீட்டனர். இந்த விவகாரத்தில் பெற்ற மகளை தாயே விபசாரத்தில் தள்ளிய அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது. தாயின் 2-வது கணவருக்கு பிறந்த சகோதரரும் இதற்கு துணையாக இருந்து உள்ளார்.

இருவரும் சேர்ந்து, அந்த பெண்ணிடம் முதலில், லைவ் இசை கச்சேரி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என கூறி அனுப்பி உள்ளனர். ஆனால், தரகர்கள் உதவியுடன் பெண்ணை விபசாரத்தில் தள்ளியது போன பின்னரே அவருக்கு தெரிய வந்து உள்ளது.

மும்பை தவிர, வெளிநாடுகளுக்கும் செல்லும்படி அவரை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்து உள்ளனர். பஹ்ரைன், சிங்கப்பூர், மஸ்கட் உள்ளிட்ட நாடுகளில் லைவ் ஷோ என கூறி மகளை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரிய வந்து உள்ளது.

சில சமயங்களில் இதற்கு மறுக்கும் மகளை இருவரும் சேர்ந்து கொடுமைப்படுத்தி, மிரட்டியுமுள்ளனர். அந்த பெண்ணின் சிறு வயது மகனையும் அவர்கள் அடித்து, துன்புறுத்தி இவரை சம்மதிக்க வைத்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து பெண்ணின் தாய் மற்றும் சகோதரரையும் போலீசார் பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்துள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. தப்பியோடிய இடைத்தரகர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.

நவ்கார் காவல் நிலைய போலீசார், மனித கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் என்.ஜி.ஓ. அமைப்பின் உதவியுடன் அந்த பெண் மீட்கப்பட்டு உள்ளார்.


Next Story