3 மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் கஞ்சா விற்ற தாய் கைது


3 மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன் கஞ்சா விற்ற தாய் கைது
x

சிறையில் உள்ள கணவர் கூறியபடி 3 மாற்றுத்திறனாளி பிள்ளைகளுடன், கஞ்சா விற்பனை செய்த தாயை போலீசார் கைது செய்தனர்.

கலாசிபாளையம்:-

கஞ்சா விற்பனை

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா பகுதியை சேர்ந்தவர் முஜ்ஜு. இவரது மனைவி நக்மா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகள் மாற்றுத்திறனாளிகள் என கூறப்படுகிறது. மேலும் வறுமையில் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கிடையே தம்பதி பெங்களூருவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எஸ்.ஜே.பார்க் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் முஜ்ஜு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டார். அப்போது அவரை போலீசார் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதையடுத்து அவரை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் அவரது மனைவி நக்மா, தனது 3 குழந்தைகளுடன் கலாசிபாளையம் சர்க்கிள் பகுதியில் நீண்டநேரமாக நின்றார்.

மாற்றுத்திறனாளி குழந்தைகளிடம்..

இதனால் அந்த வழியாக ரோந்து சென்ற போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்தனர். மேலும் அவரிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சா இருந்தது தெரிந்தது. இதுகுறித்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து பெங்களூருவில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் பஸ்சில் கஞ்சாவுடன் பயணிக்கும்போது போலீஸ் பிடித்துவிடாமல் இருப்பதற்காக கஞ்சா அடங்கிய பைகளை தனது மாற்றுத்திறனாளி குழந்தைகளிடம் கொடுத்து கடத்தி வந்து வந்துள்ளார்.

26 கிலோ கஞ்சா

மேலும் அந்த பகுதியில் நின்று கஞ்சா விற்பனை செய்தபோது போலீசிடம் சிக்கியது தெரிந்தது. மேலும் சிறையில் இருக்கும் தனது கணவர் அறிவுறுத்தலின் படி கஞ்சா விற்று வந்ததுள்ளார்.

இதையடுத்து நக்மாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.13 லட்சம் மதிப்பிலான 26 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மாற்றுத்திறனாளி குழந்தைகளுடன் தாய் கஞ்சா விற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story