17 வயது சிறுமியை ரூ.2 லட்சத்துக்கு விபசார கும்பலிடம் விற்ற தாய் -2 பெண்கள் உள்பட 3 பேர் கைது


17 வயது சிறுமியை ரூ.2 லட்சத்துக்கு விபசார கும்பலிடம் விற்ற தாய் -2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
x

விபசார கும்பலிடம் ரூ.2 லட்சத்துக்கு பெற்ற மகளை விற்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அந்த சிறுமியின் தாயை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

மைசூரு:-

17 வயது சிறுமி

மைசூரு(மாவட்டம்) டவுன் ஹினகல் மேம்பாலத்தில் நேற்று முன்தினம் காலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அந்த காரை வழிமறித்து போலீசார் சோதனை நடத்தினர். அப்போது காரில் 17 வயது சிறுமி உள்பட 3 பெண்களும், டிரைவரும் இருந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அந்த சிறுமி தன்னை தனது தாய் விபசார கும்பலிடம் ரூ.2 லட்சத்துக்கு விற்று விட்டதாக பகீர் தகவலை தெரிவித்தார்.

ரூ.2 லட்சத்துக்கு விற்றார்

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் விபசார கும்பலிடம் விற்கப்பட்ட சிறுமி உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது தாய் மல்லம்மா. அந்த சிறுமியுடன் காரில் வந்தவர்கள் சந்தனா, மஞ்சுளா மற்றும் கார் டிரைவர் சுமன் ஆகியோர் ஆவர். விபசார தொழில் நடத்தி வந்த சிறுமியின் தாய் மல்லம்மா, தனது மகளை விபசார கும்பலைச் சேர்ந்த சந்தனா, மஞ்சுளா, டிரைவர் சுமன் ஆகியோரிடம் ரூ.2 லட்சத்துக்கு விற்று இருந்தார்.

பின்னர் அவர்கள் அந்த சிறுமியை பெங்களூருவுக்கு அழைத்து வந்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும், தற்போது மைசூருவில் ஒரு தனியார் ஓட்டலில் விபசாரத்தில் ஈடுபடுத்த அழைத்து வந்ததும் தெரியவந்தது.

பரபரப்பு

அதையடுத்து போலீசார் விபசார கும்பலிடம் இருந்து சிறுமியை மீட்டனர். மேலும் சந்தனா, மஞ்சுளா மற்றும் டிரைவர் சுமன் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்தனர். சிறுமியின் தாய் மல்லம்மாவை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்த சம்பவம் மைசூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story