மோட்டார் சைக்கிள் - கார் மோதல்; வாலிபர் சாவு


மோட்டார் சைக்கிள் - கார் மோதல்; வாலிபர் சாவு
x
தினத்தந்தி 31 Oct 2022 12:15 AM IST (Updated: 31 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் வாலிபர் பலியானார். சாலை பள்ளத்தால் விபத்து நடந்திருப்பதால் மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

கார் மோதி வாலிபர் சாவு

பெங்களூரு எலகங்கா அருகே அட்டூரில் வசித்து வந்தவர் ஹர்ஷா(வயது 22). இவரது நண்பர் ராகுல். நேற்று முன்தினம் ஹர்ஷாவும், ராகுலும் மோட்டார் சைக்கிளில் ஜாலஹள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அட்டூர் அருகே உள்ள சாலையில் எதிரே வந்த ஒரு கார், ஹர்ஷாவின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஹர்ஷா தலையில் காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார். ராகுல் பலத்தகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு

இதற்கிடையில், சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு எலகங்கா போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது விபத்து நடந்த பகுதியில் உள்ள சாலையில் சமீபத்தில் பெய்த மழையால் பள்ளங்களாக காட்சி அளித்ததுடன், அதன் காரணமாக விபத்து நடந்ததும் தெரிந்தது. மேலும் காரை டிரைவர் கவனக்குறைவாக ஓட்டியதும் விபத்திற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

விபத்திற்கு சாலை பள்ளமும் ஒரு காரணம் என்பதால், மாநகராட்சி அதிகாரிகள் மீதும் எலகங்கா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் கார் டிரைவரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சாலை பள்ளத்திற்கு பெண் பலியாகி இருந்தார். தற்போது வாலிபர் ஒருவர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story