திருமண நிகழ்ச்சிக்கு புல்டோசரில் வந்த மணமகன்; டிரைவர் மீது வழக்குப்பதிவு - ரூ. 5 ஆயிரம் அபராதம்
திருமண நிகழ்ச்சிக்கு மணமகன் புல்டோசரில் வந்த நிலையில் வண்டியை ஓட்டிவந்த டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போபால்,
மத்தியபிரதேசம் பீடல் மாவட்டம் ஜல்லார் கிராமத்தில் நேற்று இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மணமகன் அன்குஷ் ஜெய்ஷ்வால் புல்டோசரில் நிகழ்ச்சி நடைபெற்றும் இடத்திற்கு வந்தார்.
ஜெய்ஷ்வாலுடன் அவரது குடும்ப உறுப்பினர்களான இரு பெண்களும் அந்த புல்டோசரில் திருமண நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அந்த புல்டோசரை ரவி பாஸ்கர் என்ற டிரைவர் ஒட்டி வந்தார்.
சிவில் இன்ஜினியரான ஜெய்ஷ்வால் தனது திருமணத்தை மிகவும் நினைவு கூரத்தக்க மாற்ற எண்ணியே புல்டோசரில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்ததாக அவர் கூறினார்.
இந்நிலையில், இது தொடர்பாக புகைப்படங்கள், வீடியோக்கள் சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் புல்டோசர் டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புல்டோசர் வர்த்தக ரீதியிலான பயன்பாட்டிற்கே பயன்படுத்தப்படும் என்றும் அதில் மக்களை ஏற்றி செல்ல அனுமதி இல்லை என சட்டம் உள்ளதாக தெரிவித்து மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் புல்டோசாரை ஓட்டிவந்த டிரைவர் ரவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், மோட்டார் வாகன சட்டத்தை மீறியதற்காக புல்டோசர் டிரைவர் ரவிக்கு போலீசார் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.