ஆன்லைன் மூலம் பழகிய நபரை சந்திக்க டெல்லி சென்ற மும்பை சிறுமி..!
ஆன்லைன் மூலம் பழகியவரை சந்திப்பதற்காக மும்பையை சேர்ந்த சிறுமி, டெல்லி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை,
மும்பையை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென காணாமல் போயுள்ளார். இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமி, டெல்லியை சேர்ந்த சிறுவன் ஒருவருடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவனின் பெற்றோரும் டெல்லியில், தங்களது மகன் காணாமல் போயுள்ளதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதையடுத்து போலீசார், தொழில்நுட்ப உதவியை பயன்படுத்தி இருவரையும் மத்தியப்பிரதேசத்தில் உள்ள போபாலில் கண்டுபிடித்ததாக போலீசார்தெரிவித்தனர். சமூக வலைதளம் மூலம் பழகிய இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், சிறுவன் மற்றும் சிறுமி இருவரும் குழந்தைகள் நல குழுவின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள், அவர்களின் மருத்துவ அறிக்கைகள் மற்றும் உத்தரவுகளின்படி அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி கூறினார்.