மும்பை: மூலிகை செடி பெயரில் ரூ.1,725 கோடி ஹெராயின் கடத்தல்


மும்பை:  மூலிகை செடி பெயரில் ரூ.1,725 கோடி ஹெராயின் கடத்தல்
x

மும்பையில் மூலிகை செடி என்ற பெயரில் கடத்தப்பட்ட ரூ.1,725 கோடி மதிப்பிலான ஹெராயின் என்ற போதை பொருளை டெல்லி சிறப்பு போலீசார் கைப்பற்றி உள்ளனர்.


புதுடெல்லி,


மராட்டியத்தின் மும்பை நகரில் நவஷேவா துறைமுகத்தில் பெரிய கண்டெய்னர் ஒன்று வந்துள்ளது. இந்நிலையில், கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து டெல்லி சிறப்பு போலீசார் துறைமுகத்துக்கு சென்று குறிப்பிட்ட கண்டெய்னரில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.

இதில், அதிமதுரம் என்ற பெயரிலான மூலிகை செடியின் மீது ஹெராயின் என்ற போதை வஸ்துக்களை தடவி கடத்தல் கும்பல் நூதன முறையில் கடத்தலில் ஈடுபட்டு உள்ளது.

இதுபற்றி டெல்லி சிறப்பு போலீசின் காவல் ஆணையாளர் தலிவால் செய்தியாளர்களிடம் கூறும்போது, மும்பை நவஷேவா துறைமுகத்தில் கண்டெய்னரில் நடந்த சோதனையில் 22 டன்கள் (1 டன் என்பது 1,000 கிலோ) கொண்ட ஹெராயின் முலாம் பூசப்பட்ட மூலிகை செடிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

அந்த போதை பொருட்களின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1,725 கோடி ஆகும் என கூறியுள்ளார். டெல்லிக்கு இந்த கண்டெய்னர் கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இந்த பறிமுதல், நமது நாட்டை போதை பொருள் தொடர்புடைய பயங்கரவாதம் எப்படி பாதிப்பு ஏற்படுத்துகிறது என்பதற்கு அடையாளம்.

சர்வதேச அளவில் போதை பொருள் கடத்தல்காரர்கள் நம்முடைய நாட்டில் போதை பொருட்களை திணிப்பதற்கு வெவ்வேறு வழிமுறைகளை பயன்படுத்துகின்றனர் என்று டெல்லி கமிஷனர் கூறியுள்ளார்.


Next Story