சர்ச்சைக்குரிய மேடை நகைச்சுவை கலைஞர் நிகழ்ச்சிக்கு டெல்லி போலீஸ் அனுமதி மறுப்பு
சர்ச்சைக்குரிய மேடை நகைச்சுவை கலைஞர் முனவர் பரூகி நிகழ்ச்சிக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
டெல்லி,
மேடை நகைச்சுவை கலைஞர்களில் பிரபலமானவர் முனவர் பரூகி. இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் தனது மேடை நகைச்சுவை நிகழ்ச்சிகளில் இந்து மத கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக பரூகி கைது நடவடிக்கையையும் சந்தித்துள்ளார். இவரது நகைச்சுவை நிகழ்ச்சிக்கு இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, முனவர் பரூகி டெல்லியில் நாளை மேடை நகைச்சுவை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டிருந்தார். தனியார் சார்பில் நடத்தப்பட உள்ள இந்த நிகழ்ச்சி மத்திய டெல்லியில் உள்ள கேதர்நாத் ஷனி உள் அரங்கத்தில் நடைபெறவிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. நாளை மதியம் 2 மணி முதல் இரவு 9.30 வரை நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது.
இதற்கிடையில், டெல்லியில் முனவர் பரூகியின் மேடை நகைச்சுவை நிகழச்சி நடத்த என விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தல் போன்ற இந்து மத அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. நிகழ்ச்சிக்கு அனுமதிக்கக்கூடாது என தெரிவித்தன.
இந்நிலையில், டெல்லியில் நாளை நடைபெறவிருந்த முனவர் பரூகியின் மேடை நகைச்சுவை நிகழ்ச்சிக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். முனவர் பரூகியின் நிகழ்ச்சி இப்பகுதியில் மத நல்லிணக்கத்தை பாதிக்கும் என கூறி நிகழ்ச்சிக்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.
முன்னதாக பரூகி ஐதராபாத்தில் மேடை நகைச்சுவை நிகழ்ச்சி நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.