குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை
குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தலையில் கல்லைப்போட்டு தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு கோவிந்தராஜ நகர் 2-வது கிராஸ் 2-வது மெயின் ரோட்டில் வசித்து வருபவர் நரேஷ்(வயது 33). இவரது மனைவி மகாதேவி. இந்த தம்பதிக்கு 10 வயதில் அஞ்சலி என்ற மகளும், 7 வயதில் நரசிம்மா என்ற மகனும் உள்ளனர். நரேசும், மகாதேவியும் கட்டிட தொழிலாளியாக வேலை செய்தார்கள். நேற்று வேலைக்கு செல்லாததால் கணவன், மனைவி வீட்டிலேயே இருந்தனர்.
பின்னர் வெளியே சென்று விட்டு வருவதாக மகாதேவியிடம் கூறிவிட்டு நரேஷ் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்த நிலையில், நேற்று மதியம் 12 மணியளவில் கோவிந்தராஜ நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகரபாவி மெயின் ரோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரி முன்பாக வைத்து நரேசுக்கும், சில நபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த மர்மநபர்கள், நரேஷ் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி அறிந்ததும் கோவிந்தராஜநகர் போலீசார் விரைந்து சென்று நரேசின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது நாகரபாவியில் உள்ள மதுக்கடையில் வைத்து நரேஷ், மாரிமுத்து உள்ளிட்டோர் சேர்ந்து மதுஅருந்தி உள்ளனர். குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மாரிமுத்து உள்பட 4 பேர் சேர்ந்து நரேஷ் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இருப்பினும் நரேஷ் கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் லட்சுமண் நிம்பரகி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவிந்தராஜ நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட கொலையாளிகள் 4 பேரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்.