பெண் கொலை வழக்கில் பீகார் வாலிபர் கைது


பெண் கொலை வழக்கில் பீகார் வாலிபர் கைது
x

பெங்களூரு அருகே துண்டு, துண்டாக வெட்டி பெண்ணை கொன்ற வழக்கில் பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு அருகே துண்டு, துண்டாக வெட்டி பெண்ணை கொன்ற வழக்கில் பீகார் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெண் கொலை

பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா பன்னரகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஜனதா காலனியில் வசித்து வந்தவர் கீதம்மா (வயது 54). இவரது கணவர் இறந்து விட்டார். 2 மகள்களுக்கும் திருமணமாகி கணவருடன் வசிக்கின்றனர். இதன் காரணமாக ஜனதா காலனியில் கீதம்மா தனியாக வசித்தார். தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக அவர் வேலை செய்தார். கீதம்மா தனக்கு சொந்தமான 2 வீட்டை பீகாரை சேர்ந்த 4 பேருக்கு வாடகைக்கு விட்டு இருந்தார்.

மற்றொரு வீட்டில் அவர் வசித்து வந்தார். கடந்த மாதம் (மே) 28-ந் தேதி கீதம்மா திடீரென்று மாயமானார். அதன்பிறகு, கடந்த 1-ந் தேதி கீதம்மாவின் உடல் பாகங்கள் ஜனதா காலனியில் பல்வேறு இடங்களில் பாலிதீன் பைகளில் வைத்து வீசப்பட்டு இருந்தது. மர்மநபர்கள் கீதம்மாவை கொன்று உடலை துண்டு, துண்டாக வெட்டி பாலிதீன் பைகளில் வைத்து பல்வேறு பகுதியில் வீசி இருந்தனர். இதுகுறித்து பன்னரகட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

பீகார் வாலிபர் கைது

கீதம்மா கொலை செய்யப்பட்ட பின்பு, அவரது வீட்டில் வாடகைக்கு இருந்த பீகாரை சேர்ந்த 4 பேரும் மாயமாகி இருந்தார்கள். ஆனேக்கல்லில் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை செய்த 4 பேரும் வேலைக்கு வராமல் இருந்ததும் தெரிந்தது. இதனால் அவர்களே கீதம்மாவை கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த 4 பேரில், ஒரு வாலிபரை மட்டும் பன்னரகட்டா போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

வீட்டை எழுதி கொடுக்காததால்...

அதாவது கீதம்மா வீட்டில் பீகாரை சேர்ந்த 4 பேர் வாடகைக்கு வசித்துள்ளனர். அவர் தனியாக வசிப்பதை அறிந்த 4 பேரும், கீதம்மாவுக்கு சொந்தமான வீட்டை அபகரிக்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்த வீட்டை தங்களது பெயருக்கு மாற்றி கொடுக்கும்படி கேட்டுள்ளனர். இதற்கு கீதம்மா மறுத்துள்ளார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த 4 பேரும், கீதம்மாவை கொலை செய்தனர். அவரது உடலை வீட்டிலேயே வைத்துவிட்டு ஆயத்த ஆடை தொழிற்சாலைக்கு வேலைக்கும் சென்றுள்ளனர்.

கீதம்மாவின் உடலில் இருந்து துர்நாற்றம் வீச தொடங்கியதும், அந்த உடலை துண்டு, துண்டாக வெட்டி இருக்கின்றனர். 2-வது நாள் முழுவதும் அவரது உடலை வெட்டிவிட்டு, அங்கேயே அவர்கள் படுத்தும் தூங்கி உள்ளனர். பின்னர் போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்று பயந்து கடந்த மாதம் (மே) 31-ந் தேதி இரவு கீதம்மாவின் உடல் பாகங்களை பாலிதீன் பைகளில் போட்டு ஜனதா காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீசியது தெரியவந்துள்ளது.

கற்பழிக்கப்பட்டாரா?

அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கீதம்மாவின் அனைத்து உடல் பாகங்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொலையில் தற்போது பீகார் வாலிபர் ஒருவர் மட்டுமே கைதாகி இருப்பதால், தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரையும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

அதே நேரத்தில் கீதம்மாவை, அந்த நபர்கள் கற்பழித்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான், அதுபற்றி தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் பன்னரகட்டாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story