வாலிபர் கொலை: ரவுடியின் கூட்டாளிகள் 3 பேரிடம் போலீஸ் விசாரணை


வாலிபர் கொலை: ரவுடியின் கூட்டாளிகள் 3 பேரிடம் போலீஸ் விசாரணை
x

பெங்களூருவில் பிறந்தநாளன்று வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

பெங்களூருவில் பிறந்தநாளன்று வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரபல ரவுடியின் கூட்டாளிகள் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

வாலிபர் கொலை

பெங்களூரு கெங்கேரி அருகே கொல்லஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த் குமார்(வயது 26). இவருக்கு கடந்த 16-ந் தேதி பிறந்தநாள் ஆகும். தனது பிறந்தநாளை நண்பர்களுடன் கொண்டாடுவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து ஹேமந்த்குமார் சென்றிருந்தார். ஆனால் மறுநாள்(17-ந் தேதி) கெங்கேரி அருகே கோனசந்திரா, நைஸ் ரோடு மேம்பாலத்திற்கு கீழே அவர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள். இதற்கிடையில், கெம்பேகவுடா நகர் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடியான ரிஜ்வான் என்ற குல்லா ரிஜ்வானை சிவமொக்காவில் வைத்து போலீசார் கைது செய்தனர்.

ரவுடி கூட்டாளிகளிடம் விசாரணை

அப்போது ஒரு வாலிபரை ஆயுதங்களால் தாக்கியும், தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யும் வீடியோ காட்சிகள் இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதுபற்றி ரவுடி ரிஜ்வானிடம் விசாரித்த போது, தனது கூட்டாளிகள் அந்த வீடியோவை அனுப்பி வைத்ததாக கூறினார். மேலும் கொலையான வாலிபர் பற்றி விசாரணை நடத்தியதில், அது கெங்கேரியில் கொலையான ஹேமந்த்குமார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் ரிஜ்வானின் கூட்டாளிகள் தான் ஹேமந்த்குமாரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதுபற்றிய தகவல்களை கெங்கேரி போலீசாருக்கு, கெம்பேகவுடா நகர் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, ஹேமந்த்குமார் கொலை வழக்கு தொடர்பாக ரவுடி ரிஜ்வானின் கூட்டாளிகள் 3 பேரை கெங்கேரி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பாஸ் யார் என கேட்டு?...

கடந்த 16-ந் தேதி இரவு கோனசந்திரா அருகே நைஸ் ரோட்டில் வைத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து ஹேமந்த்குமார் மதுஅருந்தியதாக தெரிகிறது. அப்போது ரவுடிகள் பற்றி ஹேமந்த்குமார் உள்ளிட்டோர் பேசி உள்ளனர். பின்னர் ஹேமந்த்குமாரின் நண்பர்கள் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். ஹேமந்த்குமார் செல்ல முயன்றபோது, அங்கு வந்த ரிஜ்வானின் கூட்டாளிகள், எங்களது பாஸ் யார்? என்று தெரியுமா என கேட்டுள்ளனர். அப்போது எனக்கு எந்த பாஸ் பற்றியும் தெரியாது என்று ஹேமந்த்குமார் கூறியதாக தெரிகிறது.

இதனால் உண்டான வாக்குவாதத்தில் ஹேமந்த்குமாரை குடிபோதையில் ரிஜ்வானின் கூட்டாளிகள் கொலை செய்ததாகவும், அதனை வீடியோ எடுத்து ரிஜ்வானுக்கு அனுப்பியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதுபற்றி கெங்கேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story