காசாளர் கொலை வழக்கில் மேற்கு வங்காளத்திற்கு தப்ப முயன்ற தொழிலாளி கைது
காசாளர் கொலை வழக்கில் மேற்கு வங்காளத்திற்கு தப்ப முயன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
ஜே.பி.நகர்:
பெங்களூரு ஜே.பி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முருகேஷ் பாளையாவில் நவீன்குமாருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. அங்கு காசாளராக சுபாஷ் வேலை பார்த்து வந்தார். இவரது சொந்த ஊர் மேற்கு வங்காள மாநிலம் ஆகும். அதே மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் என்பவரும் அந்த ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில் ஓட்டலில் தங்கி இருந்த சுபாசை கட்டையால் கொடூரமாக தாக்கி கொலை செய்துவிட்டு அபிஷேக் தப்பி சென்றிருந்தார். இதுகுறித்து ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிஷேக்கை தேடிவந்தனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பெங்களூருவில் இருந்து மேற்கு வங்காள மாநிலத்திற்கு தப்பி செல்வதற்காக ரெயில் நிலையத்தில் அபிஷேக் நிற்பதாக தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்ற போலீசார் அபிஷேக்கை கைது செய்துள்ளனர். ஓட்டலில் வேலை செய்யும் விவகாரத்தில் சுபாஷ், அபிஷேக் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் நேற்று முன்தினம் அதிகாலையில் குடிபோதையில் ஓட்டலில் உள்ள சோபாவில் படுத்திருந்த சுபாசை கட்டையால் தாக்கி கொன்றது தெரியவந்துள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.