தமிழகத்தை சேர்ந்த முருகன் உள்பட 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பதக்கம்
கர்நாடக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான முருகன், சீமந்த்குமார் சிங்கிற்கு ஜனாதிபதி பதக்கம் கிடைத்துள்ளது. மேலும் 18 போலீசார் மத்திய அரசின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு:-
ஐ.பி.எஸ். அதிகாரி முருகன்
நாடு முழுவதும் போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றும் போலீசாருக்கு சுதந்திர தினத்தையொட்டி மத்திய உள்துறை ஜனாதிபதி பதக்கம் மற்றும் விருது வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி கர்நாடகத்தை சேர்ந்த 20 போலீசார் சிறப்பாக பணியாற்றியதற்காக மத்திய அரசின் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கர்நாடகத்தில் மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்து வரும் கர்நாடக ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பி. சீமந்த்குமார் சிங், கர்நாடக மாநில போலீஸ் தொடர்பு மற்றும் நவீனமயம் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. தமிழ்நாட்டை சேர்ந்த முருகன் ஆகிய 2 பேரும் ஜனாதிபதி பதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
18 போலீசார் தேர்வு
இதுபோல், கர்நாடக ஆயுதப்படை போலீஸ் ஐ.ஜி. சந்தீப் பட்டீல், பெங்களூரு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பி.எஸ்.மோகன்குமார், நாகராஜ், மைசூரு உதவி கமிஷனர் சிவசங்கர், லோக் அயுக்தா துணை போலீஸ் சூப்பிரண்டு பி.கிரீஷ், பெங்களூரு உதவி போலீஸ் கமிஷனர் கேசவமூர்த்தி, பெங்களூரு சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டுகள் எம்.என்.நாகராஜ், சீனிவாஸ், அஞ்சுமாலா, சி.ஐ.டி. போலீஸ் ஏட்டு ராகவேந்திரா, பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அனில்
குமார், பெங்களூரு சதாசிவநகர் இன்ஸ்பெக்டர் (போக்குவரத்து) அசோக், ராமநகர் மாவட்டம் தாவரகெரே போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமப்பா, உடுப்பி நகர ஆயுதப்படை போலீஸ்காரர் சங்கர், ராய்ச்சூர் மாவட்ட போலீஸ்காரர் வெங்கடேஷ், பெங்களூரு போலீஸ்காரர் குமார், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் பங்காரா ஆகிய 18 பேரும் சிறந்த சேவை செய்தற்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையை சேர்ந்தவர்
ஜனாதிபதி பதக்கத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி முருகனின் சொந்த ஊர் தமிழ்நாடு சென்னை ஆகும். 1997-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், மைசூரு, சிவமொக்கா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக அவர் பணியாற்றி உள்ளார். மேலும் நக்சல் ஒழிப்பு படையின் சிறப்பு கமாண்டராகவும் முருகன் பணியாற்றி இருக்கிறார்.
பெங்களூருவில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் போலீஸ் கமிஷனராகவும் அவர் பணியாற்றி இருந்தார். போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியதற்காக தற்போது அவருக்கு ஜனாதிபதி பதக்கம் கிடைத்துள்ளது. தனக்கு ஜனாதிபதி பதக்கம் கிடைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளித்திருப்பதாக கூடுதல் டி.ஜி.பி. முருகன் தெரிவித்துள்ளார்.